செய்திகள்

தமிழகத்தில் இரட்டை ஆட்சி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது: வைகோ

Published On 2017-12-07 07:17 GMT   |   Update On 2017-12-07 07:17 GMT
கோவை, நெல்லையில் கவர்னர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டதால் தமிழகத்தில் இரட்டை ஆட்சி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது என வைகோ கூறியுள்ளார்.
கோவில்பட்டி:

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கோவில்பட்டி அருகே உள்ள வில்லிசேரியில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட நடிகர் விஷால் தாக்கல் செய்த வேட்பு மனுவை தேர்தல் அதிகாரி முதலில் தள்ளுபடி செய்து பிறகு ஏற்று மீண்டும் தள்ளுபடி செய்து விட்டதாக சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த விவகாரத்தில் ஆளும் கட்சியினர் தூண்டுதலின் பேரில் தேர்தல் அதிகாரி செயல்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுகிறது. இதனால் அந்த தேர்தல் அதிகாரி மீதான நம்பிக்கை இழந்து விட்டது. தமிழகத்தில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். செயற்கை மணல் தயாரிப்பை அரசு ஊக்குவிக்க வேண்டும். வெளிநாடுகளில் இருந்து மணல் இறக்குமதி செய்ய அனுமதி அளிக்க வேண்டும்.


தமிழகத்தில் அரசு பணிகள் ஸ்தம்பித்துள்ளதால் கவர்னர் நேரில் சென்று மக்களிடம் முதல்வர் போல் மனுக்கள் வாங்குகிறார். கோவை, நெல்லையில் கவர்னர் ஆய்வு பணிகளில் ஈடுபட்டது கூட்டாட்சி திட்டத்திற்கு எதிரானது. இதனால் தமிழகத்தில் இரட்டை ஆட்சி ஏற்படும் நிலை உருவாகி உள்ளது.

தொடர்ந்து ஆய்வு பணியில் ஈடுபட்டு வரும் கவர்னரின் நடவடிக்கையை ஆளும் கட்சி வேடிக்கை பார்க்கிறது. கவர்னர் டெல்லி ஏஜெண்டாக செயல்படுவதை ம.தி.மு.க. கண்டிக்கிறது.

இவ்வாறு வைகோ கூறினார்.
Tags:    

Similar News