செய்திகள்

விஷாலை ஆதரிப்பதாக வதந்தி பரப்புவதா?: தமிழிசை கண்டனம்

Published On 2017-12-02 09:10 GMT   |   Update On 2017-12-02 09:10 GMT
ஆர்.கே. நகர் தொகுதியில் பா.ஜனதாவே களம் இறங்கும்போது இன்னொருவரை (விஷால்) ஆதரிக்கப்போவதாக வதந்தி பரப்புவதா என்று தமிழிசை கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை:

ஆர்.கே. நகரில் முன்னணி கட்சிகள் வேட்பாளரை அறிவித்து, மனுதாக்கல் செய்து பணியை தொடங்கிவிட்டன.

பா.ஜனதா இன்னும் வேட்பாளரை அறிவிக்கவில்லை. இந்த நிலையில் நடிகர் விஷால் போட்டியிட போவதாக எழுந்துள்ள தகவல் தேர்தல் களத்தை பரபரப்படைய வைத்துள்ளது.

இதற்கிடையே விஷாலுக்கு பா.ஜனதா ஆதரவு அளிப்பதாக தகவல் பரவி உள்ளது. தேர்தலில் போட்டியிட போகிறீர்களா? ஏதாவது அரசியல் கட்சி சார்பில் போட்டியிடுவீர்களா? என்ற கேள்விகளுக்கு நாளை (ஞாயிறு) பதில் அளிப்பதாக அறிவித்து இருக்கிறார்.

தான் போட்டியிட போவது பற்றியோ, அரசியல் கட்சிகள் ஆதரவு பற்றியோ திட்டவட்டமாக விஷால் எதுவும் சொல்லாததால் பா.ஜனதா ஆதரவு அளிக்கலாம் என்ற பரபரப்பு நிலவுகிறது.

இதுபற்றி பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசையிடம் கேட்ட போது அவர் கூறியதாவது:-

ஆர்.கே.நகரில் போட்டியிடப் போகும் வேட்பாளர் பெயரை மத்திய தலைமை இன்று மாலைக்குள் வெளியிடும் என்று எதிர்பார்க்கிறோம். நாங்களே களம் இறங்கும்போது இன்னொருவரை (விஷால்) ஆதரிக்கப்போவதாக வதந்தி பரப்புவது கண்டனத்துக்குரியது.

எதற்காக ஆர்.கே.நகர் தேர்தல் ரத்தானது என்பது எல்லோருக்கும் தெரியும். ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளானவர்கள், பணங்களை கொடுத்து வாக்குகளை விலைக்கு வாங்க முயற்சித்தவர்கள் மீண்டும் மக்களிடம் ஆதரவு கேட்கிறார்கள்.

வெளிப்படையான அரசியல் வேண்டும், நேர்மையான நிர்வாகம் வேண்டும். நல்ல திட்டங்களை யாரால் தரமுடியும் என்று மக்கள் சிந்திக்க தொடங்கி இருக்கிறார்கள். நாங்களும் மக்களிடம் இதைத்தான் எடுத்து செல்வோம். மாற்றத்தை விரும்பும் மக்கள் நிச்சயம் பா.ஜனதாவை ஆதரிப்பார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News