செய்திகள்

புதுவை பல்கலைக்கழகத்துக்கு புதிய துணைவேந்தராக குர்மீத்சிங் நியமனம்

Published On 2017-11-25 05:50 GMT   |   Update On 2017-11-25 05:50 GMT
டெல்லி பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் குர்மீத் சிங்கை புதுவை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை மத்திய பல்கலைக்கழகத்தில் கடந்த 3 ஆண்டுகளாக பல்வேறு பிரச்சினைகள் இருந்து வருகிறது. அப்போதைய துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்திக்கு எதிராக முறைகேடு புகார்கள், மாணவர்கள், ஆசிரியர்கள் போராட்டம் என கடும் நெருக்கடி ஏற்பட்டது. பிறகு துணைவேந்தர் சந்திரா கிருஷ்ணமூர்த்தியை பதவிநீக்கம் செய்து ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து டாக்டர் அனிஷா பஷீர் கான் துணைவேந்தர் (பொறுப்பு) வகித்து வந்தார். இவர் மீதும் புகார்கள் எழுந்தது. இதற்கிடையே அனிஷா பஷீர்கான் உள்பட 4 பேர் மீது காலாப்பட்டு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அனிஷா பஷீர்கானையும் துணைவேந்தர் பதவியில் இருந்து நீக்க வேண்டும்என மாணவர்களும், ஊழியர்களும் போராட்டம் நடத்தினார்கள்.

இதற்கிடையே தேர்வுக்குழு அமைக்கப்பட்டு இறுதியில் 5 பேர் கொண்ட பட்டியல் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்திடம் தேர்வுக் குழு வழங்கியது. ஆனால், புதிய துணைவேந்தர் நியமனம் பற்றி அறிவிப்பு வெளியாகாமல் இருந்தது.

இந்த நிலையில் டெல்லி பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் குர்மீத் சிங்கை புதுவை பல்கலைக்கழக புதிய துணைவேந்தராக நியமித்து மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இவர் பதவி ஏற்கும் நாளில் இருந்து 5 ஆண்டுகள் பதவி வகிப்பார். இந்த உத்தரவு புதுவை பல்கலைக்கழக பதிவாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தற்போது பொறுப்பு துணைவேந்தராக பதவி வகிக்கும் அனிஷா பஷீர்கான் இந்த மாதம் 30-ந் தேதியுடன் ஓய்வு பெறுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News