செய்திகள்

தேர்தல் ஆணைய முடிவின் பிண்ணனியில் மத்திய அரசு: டி.டி.வி தினகரன் குற்றச்சாட்டு

Published On 2017-11-23 11:14 GMT   |   Update On 2017-11-23 11:14 GMT
இரட்டை இலை சின்னத்தை முதல்வர் அணிக்கு ஒதுக்கீடு செய்துள்ள தேர்தல் ஆணையத்தின் முடிவின் பிண்ணனியில் மத்திய அரசு இருப்பதாக டி.டி.வி தினகரன் குற்றம் சாட்டியுள்ளார்.
சேலம்:

அ.தி.மு.க பெயர் மற்றும் இரட்டை இலை சின்னத்தை யாருக்கு ஒதுக்குவது? என்பது தொடர்பான விசாரணை டெல்லியில் உள்ள தேர்தல் ஆணையத்தில் நடந்தது. விசாரணையின் முடிவை தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.

கட்சியின் பெயர் மற்றும் இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அணியினருக்கு ஒதுக்கி அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவர்கள் கட்சியின் பெயர், சின்னத்தை பயன்படுத்த தடை ஏதும் இல்லை எனவும் கூறியுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த டி.டி.வி தினகரன் தேர்தல் ஆணையம் நடுநிலையுடன் செயல்படவில்லை என குற்றம் சாட்டினார். மேலும் அவர் கூறியதாவது:-

இரட்டை இலை சின்னம் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவாக தேர்தல் ஆணையம் செயல்பட்டுள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும். தேர்தல் ஆணையத்தை மத்திய அரசு கையில் வைத்துள்ளது. தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஏ கே சோதி குஜராத் மாநிலத்தில் தலைமை செயலாளராக பணியாற்றியவர்.

இதற்கு முன்னர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் எனக்கு வெற்றி வாய்ப்பு இருந்ததன் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. பன்னீர் செல்வத்திற்கு ஆதரவாக செயல்பட்ட மத்திய அரசு தற்போது எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக செயல்படுகிறது. அதனால் தான், மைத்ரேயன் போன்றோர் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பன்னீர் செல்வத்தின் நிலை போகபோக தெரியும்.

இரட்டை இலை சின்னம் குரங்கு கையில் கிடைத்த பூமாலையாக ஆகி விட்டது. ஆனால், எடப்பாடி பழனிசாமி அரசுக்கு 111 எம்.எல்.ஏக்கள் மட்டுமே ஆதரவாக இருப்பதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்பதை தேர்தல் ஆணையமே உறுதி செய்துள்ளது.

சின்னம் இல்லாவிட்டாலும் மக்களும், தொண்டர்களும் தங்களது பக்கமே இருக்கின்றனர். சசிகலா முடிவு செய்தால் ஆர்.கே நகரில் மீண்டும் போட்டியிடுவோம்

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News