செய்திகள்

தலைமை செயலகத்தில் கவர்னருக்கு அறை தயார்: டிசம்பர் 1-ந்தேதி செல்கிறார்

Published On 2017-11-23 09:54 GMT   |   Update On 2017-11-23 09:55 GMT
கவர்னர் பன்வாரிலால் புரோகித், டிசம்பர் 1-ந்தேதி தலைமை செயலகத்தில் உள்ள தனது அறைக்கு செல்வார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
சென்னை:

தமிழக கவர்னராக கடந்த 6-ந்தேதி பொறுப்பேற்ற பன்வாரிலால் புரோகித் புதிய அதிரடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளார்.

மராட்டிய மாநிலத்தை சேர்ந்த இவர் மத்திய-மாநில அரசுகளில் மந்திரியாக இருந்ததோடு பல்வேறு உயர் பதவிகளில் இருந்து அனுபவம் பெற்றார். அந்த அனுபவத்தை அவர் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தத் தொடங்கியுள்ளார்.

தமிழக மக்களுடன் இரண்டற கலந்து பழக வேண்டும் என்பதற்காக தமிழ் கற்று வரும் அவர் சமீபத்தில் கோவை சென்றிருந்த போது, அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார். அரசு நிர்வாகத்தில் கவர்னர் தலையிடுவதாக எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்தன.

இந்த சர்ச்சையை ஒதுக்கி தள்ளிய கவர்னர் பன்வாரிலால் புரோகித், தொடர்ந்து அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்போவதாக அறிவித்தார். நேற்று மாலை அவர் சில உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார். சுமார் 1 மணி நேரம் நடந்த அந்த ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசப்பட்டது என்று தெரியவில்லை.

இந்த அதிரடிகளுக்கிடையே அடுத்தக்கட்டமாக தலைமைச் செயலகத்துக்கு செல்ல கவர்னர் பன்வாரிலால் முடிவு செய்துள்ளார். தலைமை செயலகத்தில் கவர்னருக்கு என்று தனி அறை உள்ளது. முதல் அமைச்சர் அலுவலக அறைக்கு அருகிலேயே அந்த அறை உள்ளது.

பொதுவாக கவர்னர் பொறுப்பில் இருப்பவர் அங்கு சென்று அமர்ந்து பணிகள் செய்வதில்லை. ஆனால் கவர்னர் பன்வாரிலால் அங்கு சென்று அமர்ந்து அதிகாரிகளை அழைத்து பேச திட்டமிட்டுள்ளார்.

இதையடுத்து அவரது அறை விறுவிறுப்பாக சீரமைக்கப்பட்டு தயார் ஆகி வருகிறது. பெரும்பாலான பணிகள் முடிந்து அறை தயார் ஆகிவிட்டது. 29-ந் தேதிக்குள் மற்ற சிறு, சிறு பணிகளையும் முடித்து அறையை ஒப்படைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

டிசம்பர் 1-ந்தேதி முகூர்த்த நாளாகும். அன்றைய தினம் வெள்ளிக்கிழமையாக இருப்பதால் அன்று தலைமை செயலகத்துக்குள் தன் முதல் காலடியை எடுத்துவைக்க கவர்னர் பன்வாரிலால் திட்டமிட்டுள்ளார்.

இதற்கான ஏற்பாடுகளை கவர்னர் மாளிகை அதிகாரிகள் ஓசையின்றி செய்து வருகிறார்கள். தலைமை செயலக அறைக்கு அடிக்கடி வர உள்ள கவர்னர் அரசின் பணிகளை ஆய்வு செய்வார் என்று அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.
Tags:    

Similar News