செய்திகள்

லக்கானி நாளை டெல்லி செல்கிறார்: ஆர்.கே.நகர் தேர்தல் தேதி 2 நாளில் வெளியாகும்

Published On 2017-11-23 09:36 GMT   |   Update On 2017-11-23 09:36 GMT
தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நாளை டெல்லி செல்லவிருக்கும் நிலையில், ஆர்.கே.நகர் சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி இரண்டு நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை:

ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5-ந்தேதி மரணம் அடைந்தார். அவர் எம்.எல்.ஏ. ஆக இருந்து சென்னை ஆர்.கே.நகர் தொகுதி காலி இடமாக அறிவிக்கப்பட்டது.

அந்த தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் கடந்த ஏப்ரல் மாதம் 12-ந்தேதி தேர்தல் நடைபெறும் என்று தலைமை தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது.

அந்த தேர்தலில் அ.தி.மு.க. அம்மா அணி சார்பில் டி.டி.வி. தினகரன், அ.தி.மு.க. புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், தி.மு.க. சார்பில் மருது கணேஷ், பா.ஜ.க. சார்பில் கங்கை அமரன் போட்டியிட்டனர். பிரசாரத்தின் போது வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இதையடுத்து வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது டி.டி.வி. தினகரனுக்கு ஆதரவாக ரூ.96 கோடி பணம் கொடுக்கப்பட்டு இருப்பைதை உறுதிப்படுத்தும் ஆவணங்கள் சிக்கின. உடனே ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

பணப்பட்டுவாடா பற்றிய விசாரணை இன்னும் முழுமை அடையவில்லை. இந்த நிலையில் ஆர்.கே.நகர் தேர்தலை நடத்த கோரி கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அப்போது தி.மு.க. தரப்பிலும் ஒரு வழக்கு தொடரப்பட்டது.

ஆர்.கே. நகர் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என்று தி.மு.க. மனுவில் வலியுறுத்தப்பட்டிருந்தது. அதன் பேரில் நடவடிக்கை எடுக்கப்பட்டு, 45 ஆயிரத்து 889 போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.



சமீபத்தில் இது தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்த போது டிசம்பர் 31-ந்தேதிக்குள் ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்த வேண்டும் என்று கோர்ட்டு உத்தரவிட்டது. டிசம்பர் மாதம் மழை, தேர்வு, கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் உடனே தேர்தலை நடத்த இயலாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் நீதிபதிகள் அதை ஏற்கவில்லை. ஆர்.கே. நகர் தொகுதி மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் ஓராண்டாக இருப்பதை ஏற்க இயலாது. எனவே ஏற்கனவே கூறியபடி டிசம்பர் 31-ந்தேதிக்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

சென்னை ஐகோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இன்னும் 38 நாட்களுக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தலைமை தேர்தல் கமி‌ஷனுக்கு ஏற்பட்டுள்ளது. தேர்தலை நடத்த சுமார் 25 நாட்கள் போதும். எனவே உடனே தேர்தல் அறிவிப்பை வெளியிட தலைமை தேர்தல் கமி‌ஷன் முடிவு செய்துள்ளது.

இதுபற்றி ஆலோசிக்க தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானியை டெல்லிக்கு வருமாறு தலைமை தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. அதை ஏற்று இன்று ராஜேஷ் லக்கானி இன்றே டெல்லி செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்று அவர் டெல்லி செல்லவில்லை. நாளை (வெள்ளிக்கிழமை) அவர் டெல்லிக்கு செல்ல உள்ளாரர்.

நாளை பிற்பகல் தலைமை தேர்தல் கமி‌ஷன் அதிகாரிகளுடன் ராஜேஷ் லக்கானி பேச்சு நடத்துவார் என்று தெரிய வந்துள்ளது. வாக்காளர் பட்டியல் வெளியீடு, பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பணப்பட்டுவாடாவை தடுக்கும் நடவடிக்கைகள் குறித்து அவர்கள் விவாதிக்க முடிவு செய்வார்கள்.

அதன் பிறகு தேர்தல் அட்டவணை தயாரிக்கப்படும். டிசம்பர் 25-ந்தேதி கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு முன்பு தேர்தலை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு இருப்பதாக தெரிய வந்துள்ளது. அந்த அடிப்படையில் பார்த்தால் டிசம்பர் மாதம் 3-வது வாரம் ஓட்டுப்பதிவு நடைபெற வாய்ப்பு இருப்பதாக தெரிய வந்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ தேர்தல் அறிவிப்பு 2 நாட்களுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Tags:    

Similar News