செய்திகள்

தமிழக அமைச்சர்களை விமர்சிப்பதா?: நாராயணசாமிக்கு அ.தி.மு.க. கண்டனம்

Published On 2017-11-20 09:58 GMT   |   Update On 2017-11-20 09:58 GMT
தமிழக அமைச்சர்கள் பற்றி தரம் தாழ்ந்து அவதூறாக கருத்து தெரிவித்த நாராயணசாமிக்கு புதுவை அ.தி.மு.க. வன்மையாக கண்டித்துள்ளது.
புதுச்சேரி:

புதுவை அ.தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவர் அன்பழகன் எம்.எல்.ஏ. இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

புதுவையில் காங்கிரஸ் ஆட்சி அமைந்து 1½ ஆண்டுகள் ஆகிறது. ஆனால் எந்த ஒரு நலத்திட்டத்தையும் செயல்படுத்தாமல் மக்களுக்கு ஏமாற்றத்தை அளித்து வருகிறது. நாராயணசாமி தனது தவறுகளில் இருந்து தப்பித்து கொள்ள தினந்தோறும் வாய்க்கு வந்ததை பேசி மலிவு விளம்பரம் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகிறார்.

தனது தகுதியை மறந்து பல்வேறு மாநில முதல்-அமைச்சர்கள் பற்றியும் பேசுகிறார். தமிழக முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் பற்றி தரம் தாழ்ந்து அவதூறாக கருத்து தெரிவித்துள்ளதை புதுவை அ.தி.மு.க. வன்மையாக கண்டிக்கிறது.

அரசியலமைப்பு சட்டப்படி கவர்னர் மக்களை சந்திக்கலாம். நிர்வாகம் என்றால் ஏற்ற தாழ்வுகள் இருக்கும். இங்குள்ள லேடியிடம் (கவர்னர்) நாராயணசாமியின் ஜம்பம் பலிக்கவில்லை. முதலில் அவரிடம் போராடி ஜெயித்து விட்டு பிறகு மற்றவர்கள் குறித்து கருத்து சொல்லட்டும்.

புதுவை அமைச்சர்களை வைத்து கவர்னரிடம் சமாதானம் பேசுகிறார். தான் காங்கிரஸ்காரன் என்பதை மறந்து மத்திய மந்திரிகளுக்கு நாராயணசாமி சால்வை அணிவிக்கிறார். அதனால்தான் நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் காங்கிரஸ் மேலிடம் கருத்து எதுவும் தெரிவிக்கவில்லை. பிரதமரை பற்றி தவறாக பேசிவிட்டு தன்னை சந்திக்க நேரம் தரவில்லை என்று பிரதமர் மோடி மீது நாராயணசாமி குற்றம் சாட்டுகிறார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News