செய்திகள்

புதுவையில் 5625 பேர் ஒரே நேரத்தில் நடனமாடி கின்னஸ் சாதனை

Published On 2017-11-20 06:25 GMT   |   Update On 2017-11-20 06:25 GMT
புதுவை லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரியில் 5625 பேர் ஒரே நேரத்தில் நடனமாடியதால் உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி:

புதுவை நாட்டியாஞ்சலி மையம், தாகூர் அரசு கலைக்கல்லூரி மற்றும் அசிஸ்ட் உலக சாதனை நிறுவனம் சார்பில் உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனைக்காக பசுமை இந்தியா என்ற தலைப்பில் பரத நாட்டிய நிகழ்ச்சி லாஸ்பேட்டையில் உள்ள தாகூர் அரசு கலைக்கல்லூரி மைதானத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் 5 வயது முதல் 83 வயது வரையில் சிறுவர்-சிறுமிகள், ஆண்கள், பெண்கள் மற்றும் மாற்று திறனாளிகள், திருநங்கைகள் என 5625 பேர் பங்கேற்று பரதநாட்டியம் ஆடினர். நடன நிகழ்ச்சி 26 நிமிடங்கள் 2 வினாடிகள் நீடித்தது.

இந்த நாட்டிய நடன நிகழ்ச்சியை அமைச்சர் ஷாஜகான் தொடங்கி வைத்தார். லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., ஜிப்மர் இயக்குனர் சுபாஷ் சந்திர பரிஜா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நாட்டிய நடன நிகழ்ச்சியில் புதுவை மற்றும் தமிழகத்தில் சென்னை, திருச்சி, கோவை, சேலம், மதுரை, நெல்லை, வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, நாகை ஆகிய மாவட்டங்கள், கேரளா, குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும், தாய்லாந்து, மலேசியா உள்ளிட்ட பல வெளிநாடுகளில் இருந்து நாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.

கடந்த ஆண்டு சென்னையில் நடைபெற்ற பரதநாட்டிய நிகழ்ச்சியில் 4525 பேர் பங்கேற்று 21 நிமிடங்கள் நாட்டியம் ஆடினர். தற்போது புதுவையில் நடந்த நாட்டிய நிகழ்ச்சி மூலம் இந்த சாதனை முறியடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இந்த சாதனை நிகழ்ச்சி உலக சாதனை மற்றும் கின்னஸ் சாதனைக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News