செய்திகள்

சபரிமலையில் நடை திறப்பு: அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து நாளை முதல் விரதம்

Published On 2017-11-16 05:42 GMT   |   Update On 2017-11-16 05:43 GMT
சபரிமலை அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டதால் பக்தர்கள் மாலை அணிந்து நாளை முதல் விரதம் இருக்க தொடங்குகிறார்கள்.
சென்னை:

சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு ஆண்டுதோறும் அய்யப்ப பக்தர்கள் கார்த்திகை முதல் தேதியில் மாலை அணிந்து மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜை காலங்களில் சென்று அய்யப்பனை தரிசிப்பார்கள்.

இந்த ஆண்டு மண்டல பூஜை, மகரவிளக்கு பூஜைக்காக நேற்று மாலையில் அய்யப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. இன்று அதிகாலை 4 மணிக்கு புதிய மேல்சாந்தி ஏ.வி.உண்ணிகிருஷ்ணன் நடைதிறந்து பூஜைகள் செய்தார். நிர்மால்ய தரிசனமும், அதைத் தொடர்ந்து கணபதி ஹோமமும் நடந்தது. காலை 11.30 மணி வரை நெய் அபிசேகம் நடந்தது.

இனி மண்டல பூஜை நடைபெறும் டிசம்பர் 26-ந்தேதி வரை தினமும் நடை திறக்கப்பட்டு நெய் அபிசேகம் மற்றும் பூஜைகள் நடைபெறும். பின்னர் நடை சாத்தப்பட்டு டிசம்பர் 31-ந் தேதி மாலை 5 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்பட்டு மகரவிளக்கு பூஜைகாலம் வரை தினமும் பூஜைகள் நடைபெறும்.

இந்த ஆண்டு விரதம் இருந்து சபரிமலை செல்லும் பக்தர்கள் நாளை (கார்த்திகை 1-ந்தேதி) மாலை அணிந்து விரதம் தொடங்குகிறார்கள்.

நேற்று நடை திறக்கப்பட்டதால் ஒருசிலர் இன்றும் மாலை அணிந்தனர். சென்னை மகாலிங்கபுரம், ராஜா அண்ணாமலைபுரம், அண்ணாநகர் ஆகிய இடங்களில் உள்ள அய்யப்பன் கோவில்களில் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிவார்கள். மாலை போடும் பக்தர்கள் துளசிமணி மாலைகள் மற்றும் கருப்பு, நீலம், காவி போன்ற வேட்டிகளையும் ஆர்வத்துடன் வாங்கினார்கள்.

விரதம் இருந்து செல்லும் பக்தர்களை வரவேற்க சபரிமலையும் தயாராகி விட்டது. கடந்த ஆண்டுகளை விட கூடுதலாக 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள்.

சபரிமலையில் கேட்க தொடங்கி இருக்கும் சரண கோ‌ஷமும், நெய்வாசமும் இனி 2 மாதத்துக்கு தொடர்ந்து பக்தர்களுக்கு சுகமான அனுபவமாக இருக்கும்.
Tags:    

Similar News