செய்திகள்

நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது: ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு

Published On 2017-11-16 04:02 GMT   |   Update On 2017-11-16 04:03 GMT
சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு நிலுவையில் உள்ளதால், நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது என்று ஐகோர்ட்டில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கடந்த 1991-ம் ஆண்டு மே 21-ந் தேதி ஸ்ரீபெரும்புதூரில் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில், நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. பின்னர் ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது.

இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நளினி மனு ஒன்று தாக்கல் செய்தார். அதில், ‘20 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் கைதிகளை விடுவிக்கலாம் என்று கடந்த 1994-ம் ஆண்டு தமிழக அரசு ஆணை வெளியிட்டது. அதன்படி, தன்னை விடுவிக்க வேண்டும்’ என்று மனுவில் நளினி கூறியிருந்தார்.

இந்த வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த வழக்கிற்கு தமிழக உள்துறை இணை செயலாளர் எஸ்.எல்.தேவாசிர்வாதம் பதில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில், ‘20 ஆண்டுகளுக்கு மேலாக, ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் கைதிகளை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்யலாம்’ என்று கடந்த 1994-ம் ஆண்டு பிறப்பித்த அரசாணையின் கீழ் மனுதாரர் உரிமை கோர முடியாது.

ஏனெனில், மனுதாரர் மீதான வழக்கை, சி.பி.ஐ. விசாரித்தது. அந்த அமைப்பு விசாரிக்கும் வழக்குகள், 1994-ம் ஆண்டு அரசாணைக்கு பொருந்தாது. மேலும், ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி உள்பட 7 பேரை விடுதலை செய்வது குறித்து தமிழக அரசு முடிவு எடுத்தது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு தொடர்ந்த வழக்கு நிலுவையில் இருப்பதை, மனுதாரர் மறைத்து இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்’ என்று கூறியுள்ளார்.

மேலும், ‘7 பேரை விடுதலை செய்வது என்ற தமிழக அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சுப்ரீம் கோர்ட்டு அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் இருக்கும்போது, நளினியை முன்கூட்டியே விடுதலை செய்ய முடியாது. எனவே, இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்’ என்றும் கூறியுள்ளார்.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.

Tags:    

Similar News