செய்திகள்

தமிழகத்தில் நீட் தேர்வு மையங்களை அதிகப்படுத்த வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

Published On 2017-11-03 02:52 GMT   |   Update On 2017-11-03 02:52 GMT
தமிழகத்தில் ‘நீட்’ தேர்வு மையங்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணித் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்விக்கான கட்டமைப்புகளை பிற மாநிலத்தவருக்கு தாரை வார்க்கும் நோக்குடன் மருத்துவப் படிப்புகளுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், தமிழகத்திற்கு மேலும் ஓர் அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது. முதுநிலை மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் தமிழகத்தில் மிகக்குறைந்த அளவிலேயே தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருக்கின்றன.

கடந்த ஆண்டு நாடு முழுவதும் 41 நகரங்களில் மட்டும் தான் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டன. அவற்றில் சென்னை, கோவை, திருச்சி ஆகிய 3 நகரங்கள் தமிழகத்தில் அமைந்திருந்தன. ஆந்திரத்தில் விஜயவாடா, விசாகப்பட்டினம் ஆகிய இரு நகரங்கள் மட்டுமே இடம் பெற்றிருந்தன.



இம்முறை தேர்வு நகரங்களின் எண்ணிக்கை மும்மடங்காக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தேர்வு நகரங்களின் எண்ணிக்கை இரு மடங்காக மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. அதே நேரத்தில் ஆந்திரத்தில் இது 6 மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது. இத்தனைக்கும் ஆந்திர அரசு சிறப்பு சட்டம் இயற்றி முதுநிலை மருத்துவப் படிப்பு இடங்கள் அனைத்தையும் தானே எடுத்துக்கொள்கிறது.

தமிழகமோ 50 சதவீதம் இடங்களை மத்திய ஒதுக்கீட்டுக்கு வழங்குகிறது. அவ்வாறு இருக்கும்போது தமிழகத்தில் 6 நகரங்களில் மையங்களை அமைத்துவிட்டு, ஆந்திரத்தில் 12 நகரங்களில் மையங்களை அமைப்பது எந்த வகையில் நியாயம். எனவே, தமிழகத்தில் மேலும் பல நகரங்களில் அதிக எண்ணிக்கையில் தேர்வு மையங்களை தேசிய தேர்வு வாரியம் அமைக்க வேண்டும். இதற்காக தமிழக ஆட்சியாளர்கள் மத்திய அரசுக்கு கடுமையாக நெருக்கடி தர வேண்டும் என வலியுறுத்துகிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News