செய்திகள்

48 மணி நேரம் பலத்த மழை நீடிக்கும் - 10 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை

Published On 2017-10-31 08:23 GMT   |   Update On 2017-10-31 08:23 GMT
வடகிழக்கு பருவ மழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் உள்பட 10 மாவட்டங்களில் மீண்டும் 48 மணி நேரத்திற்கு பலத்த மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மைய இயக்குனர் கூறி உள்ளார்.
சென்னை:

வடகிழக்கு பருவ மழை கடந்த வாரம் தொடங்கி தமிழ்நாடு முழுவதும் பரவலாக பெய்து வருகிறது.

இந்த நிலையில் தென்மேற்கு வங்க கடலில் வளி மண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி உருவாகி இலங்கை அருகே மையம் கொண்டு இருந்தது.

இதன் காரணமாக சென்னையில் கடந்த 3 நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மாலை முதல் இன்று அதிகாலை வரை 36 மணி நேரம் இடைவிடாது மழை கொட்டி தீர்த்தது.

சென்னை மட்டுமல்லாது காஞ்சீபுரம், திருவள்ளூர் உள்பட தமிழகத்தின் 10 கடலோர மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. சென்னையில் இன்று காலை லேசாக மழை நின்றது. மாலையில் இருந்து மீண்டும் 48 மணி நேரத்துக்கு பலத்த மழை நீடிக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.



இதுகுறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்துள்ளது. நேற்று இலங்கை அருகே மையம் கொண்டிருந்த வளி மண்டல மேலடுக்கு சுழற்சியானது மேற்கு நோக்கி நகர்ந்து இலங்கைக்கும் தமிழகத்துக்கும் இடையே மன்னார் வளைகுடாவில் நிலை கொண்டுள்ளது.

இதன் காரணமாக வட கடலோர மாவட்டங்களான சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், கடலூர், விழுப்புரம், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 10 மாவட்டங்களிலும் புதுவையிலும் பலத்த மற்றும் மிக பலத்த மழை பெய்யும்.

இதே போல் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம் ஆகிய தென் மாவட்டங்களிலும் மிக பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் பலத்த மழை பெய்யும்.

கடந்த 24 மணி நேரத்தில் 21 இடங்களில் கன மழையும், 16 இடங்களில் மிக கன மழையும் பெய்துள்ளது.

அதிகபட்சமாக சீர்காழியில் 31 செ.மீ. மழை பெய்துள்ளது. சிதம்பரத்தில் 20 செ.மீ. மழையும், கொள்ளிடம் ஆணைக்காரன் சத்திரம், தாம்பரம், செம்பரம்பாக்கத்தில் 18 செ.மீ., மீனம்பாக்கத்தில் 17 செ.மீ., பொன்னேரி, பாபநாசத்தில் 16 செ.மீ., காட்டுக்குப்பம், காரைக்காலில் 16 செ.மீ., நுங்கம்பாக்கம், கேளம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பெய்துள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பலத்த மழை எச்சரிக்கையை தொடர்ந்து சென்னையில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் மாநகராட்சியின் புயல் பாதுகாப்பு நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அரக்கோணத்தில் இருந்து பேரிடர் மீட்பு குழுவினர் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளனர்.

வெள்ள பாதிப்பு குறித்து கீழ்க்கண்ட கட்டணமில்லா தொலை பேசி எண்கள் 044- 25367823, 25384965, 25383694, 25619206, செல்போன் வாட்ஸ்-அப் எண்கள்: 94454 77662, 94454 77205 ஆகியவற்றில் தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News