செய்திகள்

ஏ.டி.எம். ரகசிய எண்ணை பெற்று எல்.ஐ.சி. ஏஜெண்டிடம் ரூ.98 ஆயிரம் மோசடி

Published On 2017-10-22 10:58 GMT   |   Update On 2017-10-22 10:58 GMT
எல்.ஐ.சி. ஏஜெண்டிடம் போனில் வங்கி மேலாளர் என கூறி நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபரை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே உள்ள சூரன்குடியை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன் (வயது67). விவசாயியான இவர் எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் உள்ளார். சம்பவத்தன்று இவரது செல்போனில் மர்ம நபர் ஒருவர் பேசினார். அவர் தான் வங்கி மேலாளர் எனவும், பாலகிருஷ்ணனின் ஏ.டி.எம். கார்டு காலாவதியாகி விட்டது என்று கூறியுள்ளார்.

மேலும் புதிய கார்டுக்காக ஏ.டி.எம். கார்டு எண் மற்றும் ரகசிய எண்ணை கேட்டுள்ளார். இதை உண்மை என நம்பிய பாலகிருஷ்ணன் அவரிடம் ஏ.டி.எம். கார்டு எண்களை கூறியுள்ளார். அடுத்த சில நிமிடங்களில் பால கிருஷ்ணன் செல்போனுக்கு ஒரு எஸ்.எம்.எஸ். வந்தது.

அதில் பாலகிருஷ்ணனின் வங்கி கணக்கில் இருந்து ரூ.98 ஆயிரம் எடுக்கப்பட்டதாக குறிப்பிடப்பட்டிருந்தது.இதனால் அதிர்ச்சியடைந்த பாலகிருஷ்ணன் உடனே வங்கிக்கு சென்று கேட்டார். அப்போது, தான் ஏமாற்றப்பட்டதை அவர் உணர்ந்தார். இதுபற்றி நாங்குநேரி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது.

அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பாலகிருஷ்ணனிடம் போனில் வங்கி மேலாளர் என கூறி நூதன முறையில் பண மோசடி செய்த மர்ம நபர் யார்? என கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
Tags:    

Similar News