செய்திகள்

திருவாரூர் தொகுதிக்கு ரூ.10 லட்சம் மதிப்புடைய நூல்கள் கருணாநிதியிடம் வழங்கப்பட்டது

Published On 2017-10-22 05:09 GMT   |   Update On 2017-10-22 05:09 GMT
தி.மு.க. தலைவர் கருணாநிதி வென்ற திருவாரூர் தொகுதிக்குட்ப்பட்ட 50 பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் அவரிடம் வழங்கப்பட்டது.

சென்னை:

தி.மு.க. தலைவர் கருணாநிதி உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு கடந்த சில தினங்களுக்கு முன்பு முரசொலி அலுவலகம் சென்றார்.

இந்த நிலையில் கோபாலபுரத்தில் உள்ள இல்லத்தில் சீதை பதிப்பகம் சார்பில் திருவாரூர் தொகுதிக்கு ரூ.10 லட்சம் மதிப்பிலான நூல்களை சீதை பதிப்பக உரிமையாளர் கவ்மாரீஸ்வரி, கவுரா ராஜசேகர், ராஜேந்திரன் ஆகியோர் வழங்கினார்கள்.

நூல்களை பெற்றுக்கொண்ட கருணாநிதி அதை திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் பூண்டி கலைவாணரிடம் வழங்கினார்.

இந்த நிகழ்வின் போது தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உடன் இருந்தார். மு.க.ஸ்டாலின் பொன்னாடை, மாலைகளுக்கு பதிலாக புத்தகங்களை பரிசாக பெற்று வருகிறார். அதை சேகரித்து நூலகங்களுக்கு வழங்கி வருகிறார்.

இந்த திட்டத்துக்காக சீதை பதிப்பகத்தின் சார்பில் சாரதா அம்மையார் நூற்றாண்டையொட்டி ரூ.1 கோடி மதிப்புள்ள புத்தகங்கள் பள்ளிகளுக்கும், நூலகங்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

இதில் மு.க.ஸ்டாலின் வெற்றி பெற்ற கொளத்தூர் தொகுதியில் 18 பள்ளிகளுக்கு ரூ.3 லட்சத்து 60 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன.

இதன் இறுதி பகுதியாக கருணாநிதி வென்ற திருவாரூர் தொகுதியில் 50 பள்ளிகளுக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்படுகிறது. இதைத் தான் கருணாநிதியிடம் வழங்கினார்கள்.

Tags:    

Similar News