செய்திகள்

குற்றம் சுமத்தப்பட்ட அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும்: தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. மனு

Published On 2017-10-22 02:39 GMT   |   Update On 2017-10-22 02:39 GMT
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை அறிவிப்பதற்கு முன்பு, வருமான வரித்துறை குற்றம்சாட்டிய அமைச்சர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்று தேர்தல் கமிஷனுக்கு தி.மு.க. மனு அளித்துள்ளது.
சென்னை:

ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற இருந்த இடைத்தேர்தலில் தி.மு.க. சார்பில் வேட்பாளராக நிறுத்தப்பட்ட என்.மருதுகணேஷ் இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஏ.கே.ஜோதிக்கு அனுப்பிய மனுவில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஜெயலலிதாவின் மறைவை தொடர்ந்து ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதாக தேர்தல் கமிஷன் அறிவித்தது. இந்த தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் டி.டி.வி.தினகரனை வெற்றிபெறச் செய்வதற்காக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அனைத்து அமைச்சர்களும் அதிகார துஷ்பிரயோகம் செய்து, வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் வகையில் ரூ.100 கோடி செலவிட்டனர்.

அரசு எந்திரத்தை தவராக பயன்படுத்தினர். ஒரு வாக்காளருக்கு ரூ.10 ஆயிரம் என்ற அளவில் இலக்கு நிர்ணயித்திருந்தனர். விளக்கு, சேலை, வேட்டி, பால் டோக்கன், போன் ரீசார்ஜ் போன்ற வெகுமதிகளை அளித்து வந்தனர்.

இந்த நிலையில் அமைச்சர் டாக்டர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறையின் சோதனை நடந்தது. ஏப்ரல் 12-ந் தேதியன்று நடந்திருக்க வேண்டிய இடைத்தேர்தலை 3 நாட்களுக்கு முன்பாக தேர்தல் கமிஷன் நிறுத்தியது.

அதற்கு அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட சில முக்கியமான ஆவணங்களை காரணம் காட்டி இந்தத் தேர்தலை தேர்தல் கமிஷன் ரத்து செய்தது. அந்த தொகுதியில் வாக்காளர்களுக்கு மேலும் ரூ.89 கோடி பட்டுவாடா செய்வதற்கு திட்டமிட்டது தெரிய வந்தது. இதன் அடிப்படையில் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து செய்யப்பட்டது.

இந்த விவகாரத்தில் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்று கவர்னரிடம் எதிர்க்கட்சி தலைவரும் தி.மு.க. செயல் தலைவருமான மு.க.ஸ்டாலின் மனு அளித்தார்.

அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரின் வீடு உள்பட சென்னையில் 21 இடங்களிலும் தமிழகத்தின் மற்ற 11 இடங்களிலும் வருமான வரித்துறையின் சோதனை நடத்தப்பட்டது. அதில் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சியின் தலைவருமான சரத்குமார், அ.தி.மு.க.வின் முன்னாள் எம்.பி. ராஜேந்திரன், எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக துணை வேந்தர் மற்றும் சுகாதார சேவைகள் இயக்குனர் டாக்டர் கீதா லட்சுமி ஆகியோர் வீடுகளிலும் சோதனைகள் நடத்தப்பட்டன.

ஆர்.கே.நகர் தொகுதியில் உள்ள 2.63 லட்சம் வாக்காளர்களில் 2.24 லட்சம் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்த விவரங்கள், அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரிடம் இருந்து கைப்பற்றப்பட்ட ஆவணங்களில் இருந்து தெரிய வந்தன. அந்த தொகுதியை 256 பிரிவுகளாக பிரித்து, அங்குள்ள மக்களுக்கு எந்தெந்த அமைச்சர் எவ்வளவு கொடுக்க வேண்டும் என்பது பற்றிய விவரங்கள் வெளியாகின. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பெயரும் அதில் இடம் பெற்றிருந்தது.

எனவே சம்பந்தப்பட்டவர்கள் மேல் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாருக்கு இந்திய தேர்தல் கமிஷன் கடிதம் எழுதியது. ஏப்ரல் 18-ந் தேதியன்று எழுதப்பட்ட அந்த கடிதத்தின் அடிப்படையில் ஏப்ரல் 27-ந் தேதியன்று அபிராமபுரம் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. ஆனால் அதில் குற்றம்சாட்டப்பட்டவர்களின் பெயர் இடம் பெறவில்லை.

இந்த விஷயத்தில் தலைமை தேர்தல் அதிகாரியும், தேர்தல் நடத்தும் அதிகாரியும் (ஆர்.ஓ.) வருமான வரித்துறையின் சில ஆவணங்களை போலீஸ் கமிஷனரிடம் காட்டாமல் தவிர்த்துவிட்டனர் என்றே தெரிகிறது. வருமான வரித்துறையினர் கூறிய பெயர்கள் அதில் காட்டப்படவில்லை. அவர்கள் இரண்டு பேரும் ஒன்று சேர்ந்துகொண்டு, தேர்தல் கமிஷனின் உத்தரவை பின்பற்றாமல், பாரபட்சத்தோடு நடந்துகொண்டனர்.

தற்போது டிசம்பரில் அங்கு இடைத்தேர்தலை நடத்த தேர்தல் கமிஷன் திட்டமிட்டிருப்பதாக தெரிகிறது. அந்த தேர்தலுக்கான அறிவிப்பு வருவதற்கு முன்பு, அபிராமபுரம் போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கின் எப்.ஐ.ஆரில், (முதல் தகவல் அறிக்கை) வருமான வரித்துறையினர் குறிப்பிட்ட அமைச்சர்கள் உள்பட அனைவரது பெயரையும் சேர்க்க உத்தரவிட வேண்டும். இல்லாவிட்டால் இது சம்பந்தமாக வழக்கு தொடர நேரிடும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News