செய்திகள்
ஊத்தங்கரையில் தனியார் பள்ளியில் கழிவறையை கலெக்டர் கதிரவன் ஆய்வு செய்த போது எடுத்த படம்.

சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த தனியார் பள்ளியை 20 நாட்கள் மூட கலெக்டர் உத்தரவு

Published On 2017-10-21 11:20 GMT   |   Update On 2017-10-21 11:20 GMT
ஊத்தங்கரையில், சுகாதாரமற்ற முறையில் இயங்கி வந்த தனியார் பள்ளியை 20 நாட்கள் மூட கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.
ஊத்தங்கரை:

ஊத்தங்கரையில் சுகாதார பணிகளை கலெக்டர் கதிரவன் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது ஊத்தங்கரை வித்யாமந்திர் கலை கல்லூரி மாணவர்கள், கலெக்டர் ஆகியோர் ஊத்தங்கரை பேரூராட்சிக்குட்பட்ட பனந்தோப்பு பகுதியில் டெங்கு தடுப்பு சம்பந்தமான பணிகளை வீடு, வீடாக ஆய்வு செய்தனர்.

அப்போது தனியார் வாகன ஓட்டுனர் கண்ணன் என்பவர் வீட்டு வளாகத்தில் கொசு உற்பத்தியாகும் வகையில் டயர்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதே பகுதியை சேர்ந்த விஜயலட்சுமி என்பவர் சுகாதாரமற்ற வகையில் கட்டிடம் கட்டி வருவது தெரியவந்தது. இதையடுத்து கண்ணனுக்கு ரூ.15 ஆயிரமும், விஜயலட்சுமிக்கு ரூ.10 ஆயிரமும் அபராதம் விதித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

அதைத்தொடர்ந்து ஊத்தங்கரை பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது நீர்த்தேக்க தொட்டிகள், கழிவறைகள், பள்ளி வளாகம் முழுவதும் தூய்மையற்ற நிலையில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த பள்ளியை 20 நாட்கள் மூட கலெக்டர் கதிரவன் உத்தர விட்டார்.

மேலும் பள்ளி முழுவதும் சுத்தம் செய்து அலுவலர்கள் ஆய்வுக்கு பின் பள்ளியை திறக்க கலெக்டர் உத்தரவிட்டார்.
Tags:    

Similar News