செய்திகள்

போளூர் பள்ளியில் ஆசிரியரை வெட்டிய வாலிபர் கைது

Published On 2017-10-17 14:32 GMT   |   Update On 2017-10-17 14:32 GMT
போளூர் பள்ளியில் ஆசிரியரை வெட்டிய வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

போளூர்:

போளூர் பால கண்ணையன் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது38), மாற்றுத் திறனாளியான இவர், போளூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் கணித ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

பள்ளியில் நேற்று காலை பெற்றோர்-ஆசிரியர்கள் கூட்டம் நடைபெற்றது. அப்போது பள்ளி வளாகத்தில் வாலிபர் ஒருவர் கணித ஆசிரியர் கார்த்திகேயனுடன் பேசிக் கொண்டிருந்தார்.

திடீரென அந்த வாலிபர் கார்த்திகேயனின் கழுத்தை கத்தியால் அறுத்துவிட்டு தப்பி ஓடிவிட்டார். ரத்தம் வடிய கீழே சரிந்த கார்த்திகேயனை, ஆசிரியர்கள் மீட்டு போளூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர், தீவிர சிகிச்சைக்காக கார்த்திகேயன் வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இதுகுறித்து போளூர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில், கார்த்திகேயன் மாணவர்களுக்கு தனது வீட்டு மாடியில் தனிப் பயிற்சி (டியூ‌ஷன்) நடத்தி வருகிறார். இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

போளூர் காமராஜ் தெருவை சேர்ந்த கார்த்தி (வயது32) என்பவரின் அக்காள் மகள் போளூர் அரசு மகளிர் பள்ளியில் பிளஸ்2 படிக்கிறார். அந்த மாணவி ஆசிரியர் கார்த்திகேயனிடம் டியூசன் படிக்கிறார்.

டியூசனில் மாணவர்களிடம் படிப்பு சம்மந்தமாக கார்த்திகேயன் கடுமையாக நடந்து கொண்டதாகவும், அதே பகுதியில் வேறொரு ஆசிரியர் டியூசன் நடத்தி வருவதாலும் தகராறு ஏற்பட்டுள்ளது.

மேலும் கார்த்தியின் அக்காள் மகள் சரிவர படிக்காததால் சக மாணவிகள் முன்பு அவரை ஆசிரியர் திட்டியதாகவும் கூறப்படுகிறது. இதனால் அவமானமடைந்ததாக நினைத்த அந்த மாணவி தனது மாமனிடம் கூறி அழுதுள்ளார்.

ஆத்திரமடைந்த மாமன் கார்த்தி நேற்று பள்ளிக்கு சென்று ஆசிரியர் கார்த்திகேயனுடன் தகராறில் ஈடுபட்டார். அவர்களுக்குள் வாக்கு வாதம் ஏற்பட்டபோது ஆசிரியரை கத்தியால் வெட்டிவிட்டு கார்த்தி தப்பி சென்றது தெரியவந்தது.

இதையடுத்து டி.எஸ்.பி. கோட்டீஸ்வரன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் சுரேஷ்பாபு, ஜோதி, ராஜகோபால், ராணி ஆகியோர் அடங்கிய குழுவினர் தலைமறைவாக இருந்த கார்த்தியை கண்டு பிடித்து கைது செய்தனர்.

Tags:    

Similar News