செய்திகள்

ஊட்டியில் கடையை உடைத்து செல்போன் கொள்ளை

Published On 2017-10-17 12:03 GMT   |   Update On 2017-10-17 12:03 GMT
ஊட்டியில் கடையை உடைத்து செல்போன் கொள்ளையடித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டி கேசினோ சந்திப்பு பகுதியில் பிரபல செல்போன் கடை உள்ளது. தீபாவளியையொட்டி விலை உயர்ந்த செல்போன்கள் விற்பனைக்காக குவித்து வைக்கப்பட்டிருந்தன. இரவு வியாபாரத்தை முடித்து விட்டு ஊழியர்கள் கடையை பூட்டிச்சென்றனர்.

நேற்று காலை செல்போன் கடை மானேஜர் தமிழழகன் கடையை திறக்க வந்தார். அப்போது கதவு உடைக்கப்பட்டிருந்து. அதிர்ச்சியடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தார். அங்கு கடை அலங்கோலமாக சிதறி கிடந்தது. விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த ரூ.16½ லட்சம் மதிப்புள்ள நவீன செல்போன்கள் அனைத்தும் திருட்டுபோயிருந்தது தெரியவந்தது.

இது குறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன், ஊட்டி மத்திய போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிரா பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில் ஒரு கொள்ளையன் உருவம் தெளிவாக பதிவாகி உள்ளது.

இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர். மேலும் கொள்ளை நடந்த அன்று இந்த பகுதியில் பிச்சைக்காரர்கள் சிலர் வந்தும், கொள்ளை சம்பவத்துக்குபின்பு அவர்கள் மாயமாகி இருப்பதும் தெரியவந்தது.

மேலும் அந்த பிச்சைக்காரர்களை இதுவரை இந்த பகுதியில் யாரும் பார்க்கவில்லை என்றும் தெரியவந்தது. எனவே பிச்சைக்காரர்கள் போல் நடித்து கொள்ளையர்கள் கைவரிசை காட்டியிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். கொள்ளை கும்பலை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிர தேடுல் வேட்டையில் இறங்கியுள்ளனர்.

Tags:    

Similar News