செய்திகள்

பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை: அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

Published On 2017-10-11 02:55 GMT   |   Update On 2017-10-11 02:55 GMT
பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.
சென்னை:

தமிழக வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சென்னை எழிலகத்தில் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை 20-ந் தேதி முதல் பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மழை அதிகமாக பெய்யும் பட்சத்தில் பாதிப்புகளை தவிர்க்கும் வகையில், எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அனைத்து வருவாய் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு, 100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெருமழை பெய்தது. அதை வருவாய்த்துறை வெற்றிகரமாக சமாளித்தது. அந்த அனுபவத்தை பின்பற்றி, வர உள்ள வடகிழக்கு பருவமழையை சமாளிக்க அனைத்து நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு எந்த விதத்திலும் பாதிப்பும் இருக்காது என்ற நம்பிக்கையை ஏற்படுத்த அதிகாரிகள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அம்மா திட்டம் முகாமிற்கு வருபவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சான்றிதழ் மட்டும் சம்பிரதாயமாக வழங்கப்பட்டு வருவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. எனவே, தமிழக அரசின் அனைத்து திட்டங்களும் மக்களுக்கு கிடைக்கும் வகையில் அனைத்து துறை அதிகாரிகள் கலந்து கொள்ளும் வகையில் அம்மா திட்ட முகாம் மாறுதல் செய்யப்படும். பொங்கல் பண்டிகைக்கு இலவச வேட்டி, சேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

முதியோர் பென்சன், விதவைகள் பென்சன் என 30 லட்சம் பேருக்கு தற்போது பென்சன் வழங்கப்பட்டு வருகிறது. பலர் பென்சன் கேட்டு விண்ணப்பித்து வருகின்றனர். தகுதியானவர்களை தேர்வு செய்து அரசுக்கு பட்டியல் அனுப்புமாறு, மாவட்ட வருவாய் அலுவலர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால், பென்சன் பெறுபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக, வருவாய் துறையின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து அனைத்து மாவட்ட வருவாய் அலுவலர்களின் ஆய்வு கூட்டம் அங்கு நடைபெற்றது.
Tags:    

Similar News