search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இலவச வேட்டி சேலை"

    • நியாய விலைக்கடைகளின் விற்பனை முனையத்தில் வேட்டி சேலைகளை வழங்கும்போது விரல் ரேகை பதிவு கட்டாயமாக்கப்படுகிறது.
    • வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் அடங்கிய குழுவினை அமைக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    சென்னை:

    பொங்கல் வேட்டி சேலை திட்டத்துக்கு ரூ.200 கோடியை அரசு ஒதுக்கி வேட்டி-சேலை தயாரிக்க அனுமதி அளித்துள்ளது.

    இதன்படி 1 கோடியே 68 லட்சம் எண்ணிக்கையிலான சேலைகளையும் மற்றும் 1 கோடியே 63 லட்சம் வேட்டிகளையும் எதிர்வரும் பொங்கல் 2024-ம் ஆண்டு வேட்டி சேலை வழங்கும் திட்டத்திற்கு உற்பத்தி செய்யப்படுகிறது.

    பொதுமக்களுக்கு வேட்டி, சேலையினை விநியோகிக்கும் நடைமுறையினை முடிவு செய்ய ஏதுவாக, கூடுதல் தலைமைச் செயலாளர், வருவாய்த் துறை தலைமையில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையர், வருவாய்த் துறை மற்றும் கைத்தறி ஆணையர் ஆகியோர் அடங்கிய குழுவினை அமைக்கவும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

    வேட்டி-சேலை வழங்கும் திட்டத்தின்கீழ் வழங்கப்படும் வேட்டி-சேலைகள் பயனாளிகளுக்கு கிடைப்பதை உறுதி செய்ய, நியாய விலைக்கடைகளின் விற்பனை முனையத்தில் வேட்டி சேலைகளை வழங்கும்போது இந்த முறை விரல் ரேகை பதிவினை கட்டாயமாக்கப்படுகிறது.

    இதனைத் தவறாது செயல்படுத்த உரிய நடவடிக்கை எடுக்குமாறு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை மற்றும் கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறைக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    • பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு வழங்க இலவச வேட்டி, சேலையின் மொத்த ஆர்டரில் 80 சதவீத ஆர்டர் ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. 49 சொசைட்டிகளில் உற்பத்தியாகின்றன.
    • ஈரோடு சரகத்துக்கு ஒதுக்கப்பட்ட 61 லட்சம் சேலைகளில் இதுவரை 45 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டன.

    ஈரோடு:

    தமிழகத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஏழை, எளியோருக்கு இலவச வேட்டி, சேலைகள் வழங்கப்படுகிறது. மாநில அளவில் 17,455 தறிகளில் 1 கோடியே 26 லட்சத்து 19,004 வேட்டிகள், 21,389 தறிகளில் 99 லட்சத்து 56,683 சேலைகள் உற்பத்தி செய்ய ஆர்டர் வழங்கப்பட்டது.

    ஈரோடு மாவட்டத்தில் 61 லட்சத்து 29,000 சேலைகள், 69 லட்சத்து 2,000 வேட்டிகள் உற்பத்திக்கு அனுமதி வழங்கப்பட்டது.

    இதுபற்றி ஈரோடு கைத்தறி துறை உதவி இயக்குனர் சரவணன் கூறியதாவது:-

    பொங்கல் பண்டிகைக்காக பொதுமக்களுக்கு வழங்க இலவச வேட்டி, சேலையின் மொத்த ஆர்டரில் 80 சதவீத ஆர்டர் ஈரோடு மாவட்டத்துக்கு வழங்கப்பட்டது. 49 சொசைட்டிகளில் உற்பத்தியாகின்றன.

    ஈரோடு சரகத்துக்கு ஒதுக்கப்பட்ட 61 லட்சம் சேலைகளில் இதுவரை 45 லட்சம் சேலைகள் உற்பத்தி செய்யப்பட்டு விட்டன. அவை தரமாக உள்ளதா என ஆய்வு செய்து அந்தந்த மாவட்டங்களுக்கு அனுப்பும் வகையில் தயார் நிலையில் உள்ளன.

    அதுபோல 69 லட்சம் வேட்டிகள் ஆர்டர் பெறப்பட்டு, 35 லட்சம் வேட்டிக்கான உற்பத்தி நிறைவடைந்துள்ளது. மீதமுள்ள வேட்டி, சேலைகள் வரும் ஜனவரி மாதம் 20-ந் தேதிக்குள் நிறைவடையும். தற்போது 60 சதவீதம் இலவச வேட்டி, சேலை உற்பத்தி பணி நிறைவடைந்து விட்டது.

    உற்பத்தி செய்யப்பட்ட வேட்டிகள், சேலைகள் வில்லரசம்பட்டியில் உள்ள குடோனில் பேக்கில் செய்து கடந்த 3 நாட்களாக தினமும் 60 லாரிகளில் மாவட்டம் வாரியாக அனுப்பி வைக்கப்படுகிறது.

    குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் பணி முடியாது என சிலர் கூறுகின்றனர். 15 நிறங்களில் துணிகள் உற்பத்தி செய்வதால் அதற்கேற்ப நூல்கள் தயார் செய்து பெறப்பட்டுள்ளன. திட்டமிட்டப்படி முடிக்கப்படும். அதற்கேற்ப வேட்டி, சேலைகள் அந்தந்த மாவட்டங்களை சென்றடையும்படி திட்டமிட்டு பணிகள் நடக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் சேலைகள், வேட்டிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
    • வேட்டி சேலை வழங்கும் திட்டத்தால் கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.59 கோடி மக்கள் பயனடைகின்றனர்

    சென்னை:

    கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் அமைச்சர் ஆர். காந்தி வெளியிட்டுள்ள அறிக்கை:

    வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்தவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு தொடர் வேலைவாய்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி விசைத்தறி நெசவாளர் கூட்டமைப்புகள் உண்ணாவிரதம் மற்றும் போராட்டங்கள் நடத்துவதாகவும் மற்றும் இத்திட்டத்தினை அரசு கைவிட உத்தேசித்துள்ளதாகவும் சில பத்திரிகை மற்றும் ஊடகங்களில் தவறான தகவல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இது தொடர்பான அரசின் நிலைப்பாடு பின்வருமாறு,

    வேட்டி சேலை வழங்கும் திட்டம், தமிழக அரசினால் 1983-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட சீரிய திட்டங்களில் ஒன்றாகும். பொங்கல் பண்டிகையின்போது கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு வேட்டி சேலைகள் வழங்கும் பொருட்டு, ஒவ்வொரு ஆண்டும் வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தமிழக அரசு செயல்படுத்தி வருகின்றது. இத்திட்டத்திற்கு தேவையான மொத்த சேலைகள் மற்றும் வேட்டிகள் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் உற்பத்தி செய்யப்பட்டு பொது மக்களுக்கு வழங்கப்பட ஏதுவாக வருவாய்த் துறைக்கு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் 2,664 கைத்தறி நெசவாளர்கள், 11,124 பெடல்தறி நெசவாளர்கள் மற்றும் 41,983 விசைத்தறி நெசவாளர்களுக்கு நேரடி வேலைவாய்ப்பு வழங்குவதை உறுதி செய்வதுடன், தமிழகத்திலுள்ள கிராமப்புற மற்றும் நகர்புறங்களில் வசிக்கும் 3.59 கோடி மக்களுக்கு பயனளிக்கிறது.

    ஒவ்வொரு ஆண்டும் விலையில்லா சீருடை வழங்கும் திட்டத்திற்கான உற்பத்தி நிறைவடைந்தவுடன், வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடங்குவதற்கான கொள்கை அளவிலான அரசாணைகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளியிடப்பட்டு, வேட்டி சேலை உற்பத்திக்கு தேவையான நூல் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தப்புள்ளி நடைமுறைகள் துறையால் மேற்கொள்ளப்படுகின்றன.

    கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்கள் தொடர்ந்து உற்பத்தியினை மேற்கொள்ளும் வகையில், ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2022 வரை, கைத்தறி மற்றும் பெடல் தறி நெசவாளர்கள் தொடர் வேலை வாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

    நடப்பாண்டில் பொங்கல் 2023-ற்கு வேட்டி சேலை வழங்கும் திட்டத்தினை தொடர்ந்து செயல்படுத்திடவும், கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களில் தொடர்ந்து உற்பத்தியை மேற்கொள்ளவும் அரசின் கொள்கை அளவிலான ஆணைகள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

    இத்திட்டத்திற்காக 2022–2023 நிதியாண்டிற்கான வரவு செலவு திட்டத்தில் ரூ.487.92 கோடி நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ×