செய்திகள்

பழவூரில் பாறை சரிந்து விழுந்து 2 பேர் பலி: கல்குவாரி மேலாளர் உள்பட 3 பேர் மீது வழக்கு

Published On 2017-10-06 15:24 GMT   |   Update On 2017-10-06 15:24 GMT
கல்குவாரியில் 2 பேர் பலியானதால், போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்காமல் விபத்து ஏற்பட காரணமாக இருந்த மேலாளர் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை அடுத்த பழவூர் அருகே கருங்குளத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி ஒன்று உள்ளது. இந்த கல் குவாரியில் நேற்று காலை வழக்கம்போல் தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அப்போது கல் குவாரியில் உள்ள ஒரு பகுதியில் இருந்து பெரிய பாறைகள் திடீரென பெயர்ந்து கீழே விழுந்தது.

இதனால் கல்குவாரியின் கீழ் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்த ராதாபுரம் அருகே உள்ள சிங்காரதோப்பை சேர்ந்த துரை, தங்கராஜ் ஆகிய இருவர் மீதும் பாறைகள் விழுந்து அமுக்கியது. மேலும் அந்த பகுதியில் நின்ற தொழிலாளர்கள் இசக்கியப்பன் (40), அந்தோணி (45), செல்வன் ஆகியோர் மீது பாறை சரிவுகள் விழுந்தன.

இதில் துரை, தங்கராஜ் ஆகிய 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தனர். அப்போது அங்கு வேலை செய்து கொண்டிருந்த மற்ற தொழிலாளர்கள் ஓடி வந்து உயிருக்கு போராடியவர்களை மீட்டு, நாகர்கோவிலில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு இசக்கியப்பன், அந்தோணி, செல்வம் ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி பழவூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். பின்னர் துரை, தங்கராஜ் ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக பழவூர் போலீசார் கல்குவாரியில் போதிய பாதுகாப்பு ஏற்பாடுகளை கவனிக்காமல் விபத்து ஏற்பட காரணமாக இருந்த மேலாளர் சோமசுந்தரம் (52), கேசியர் நிர்மல்ராஜா (32), மேற்பார்வையாளர் சேவியர் (52) ஆகிய 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News