செய்திகள்

தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதல்: ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பலி

Published On 2017-10-03 03:38 GMT   |   Update On 2017-10-03 04:21 GMT
தர்மபுரி அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் உயிரிழந்தனர்.
தர்மபுரி:

சேலம் கிச்சிப்பாளையம் தேவந்திரபுரத்தை சேர்ந்தவர் அசோகன். இவருடைய குடும்பத்தினர் பேக்கரி கடை நடத்தி வருகிறார்கள். நேற்று முன்தினம் அசோகன் குடும்பத்தை சேர்ந்த 11 பேர் தீபாவளி பண்டிகைக்கு ஜவுளி எடுப்பதற்காக ஒரு காரில் பெங்களூருவிற்கு சென்றனர். காரை ரவிக்குமார் என்பவர் ஓட்டி சென்றார்.

ஜவுளி வாங்கிக்கொண்டு மீண்டும் சேலத்திற்கு புறப்பட்டனர். நள்ளிரவு 1 மணி அளவில் தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளியை அடுத்த குடிப்பட்டி பகுதியில் மேம்பாலத்தில் இவர்களின் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது கார் முன்னால் சென்ற ஒரு லாரியின் மீது எதிர்பாராதவிதமாக மோதியது.

இந்த விபத்தில் அசோகனின் மனைவி சித்ரா (வயது 52), அவருடைய மகன் அர்ச்சுனன் (32), அசோகனின் தம்பி காளியப்பபிள்ளையின் மகனும், தனியார் வங்கி ஊழியருமான கண்ணன் (40) ஆகியோர் இடிபாடுகளில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், கண்ணனின் மனைவி பத்மாவதி (26), மகள் தன்யா (5) உள்பட 8 பேர் படுகாயம் அடைந்தனர். டிரைவர் ரவிக்குமார் (54) லேசான காயமடைந்தார். அதியமான்கோட்டை போலீசார் மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் படுகாயமடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

உயிரிழந்த 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தார்கள். ஆனால் சிறுமி தன்யா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தாள்.

பின்பு காயமடைந்தவர்கள் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டனர். போலீசார் இந்த விபத்து காரணமாக பெங்களூரு-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

போலீசார் லாரி, காரை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர்படுத்தினார்கள். இந்த விபத்து பற்றி அதியமான்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News