செய்திகள்

கூடலூரில் மின்இணைப்பு வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகை

Published On 2017-09-28 15:28 GMT   |   Update On 2017-09-28 15:29 GMT
கூடலூரில் மின்இணைப்பு வழங்க கோரி தமிழக விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்.டி.ஓ. அலுவலகம் முற்றுகையிடப்பட்டது.
கூடலூர்:

கூடலூர் சட்டமன்ற தொகுதியில் செக்சன் 17 மற்றும் 53 வகை பிரிவு விவசாய நிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்கு மின்இணைப்பு வழங்கப்படாத நிலை உள்ளது. இதை கண்டித்தும், மின்இணைப்பு வழங்க கோரியும் கூடலூர் பழைய நீதிமன்ற ரோட்டில் உள்ள ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் நேற்று நடைபெற்றது. இதற்கு மாவட்ட தலைவர் வாசு தலைமை தாங்கினார்.

அப்போது அவர்கள் கூறியதாவது:-

கூடலூர் பகுதியில் 2004–ம் ஆண்டுக்கு பிறகு மின்இணைப்பு கொடுக்கப்பட வில்லை. இது பற்றி கேட்டால் வனத்துறை, வருவாய்த்துறை மற்றும் மின்சார வாரியத்தினர், ஆர்.டி.ஓ.விடம் தடையில்லா சான்று பெற வேண்டும் கூறுகிறார்கள். எனவே மின்இணைப்பு வழங்க கோரி பல கட்ட போராட்டம் மற்றும் அதிகாரிகளுக்கு பல முறை மனு கொடுத்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு சிரமங்களுக்கு ஆளாகி வருகின்றனர். எனவே மின்இணைப்பு வழங்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

பின்னர் அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதையடுத்து தங்களது கோரிக்கை கள் அடங்கிய மனுவை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கூடலூர் பகுதியில் அனைத்து விவசாய நிலத்துக்கும் பட்டா வழங்க வேண்டும். வனவிலங்குகள் ஊருக்குள் புகுவதை தடுக்க வேண்டும். விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும். ஓவேலி சோதனைச்சாவடியில் கெடுபிடிகள் செய்வதை தடுக்க வேண்டும். வன உரிமை சட்டம்–2006–ஐ அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். மின்இணைப்பு வழங்க தடையில்லா சான்று வழங்கி விரைவில் தீர்வு காண வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Tags:    

Similar News