செய்திகள்

தமிழ்நாட்டில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும்: வானிலை அதிகாரிகள் தகவல்

Published On 2017-09-27 04:21 GMT   |   Update On 2017-09-27 04:21 GMT
வங்கக்கடலில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும் என்றும், தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை:

தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. வங்கக்கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் வட மாவட்டங்களில் இன்று சில இடங்களில் கனமழை பெய்யும். இது குறித்து சென்னை வானிலை மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வங்கக்கடல் பகுதியில் உருவான மேலடுக்கு சுழற்சி நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் வட மாவட்டங்களில் இன்று (புதன்கிழமை) அநேக இடங்களில் மிதமான மழையும், சில இடங்களில் கனமழையும் பெய்யும். தென் மாவட்டங்களில் சில இடங்களில் மிதமான மழை பெய்யும்.

சென்னையில் சில பகுதிகளில் இன்று மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. மழை இடியுடன் கூடியதாக இருக்கும்.

இவ்வாறு அதிகாரிகள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு வருமாறு:-

மயிலாடுதுறை 9 செ.மீ., கும்பகோணம் 8 செ.மீ., ஜெயங்கொண்டம், விருத்தாசலம், ஆடுதுறை, பண்ருட்டி, ராசிபுரம் தலா 7 செ.மீ., சிவகங்கை மாவட்டம் திருப்புவனம், அரியலூர், திருவிடைமருதூர் தலா 6 செ.மீ., திருமானூர், சேலம், தஞ்சை மாவட்டம் பாபநாசம் தலா 5 செ.மீ., திருமங்கலம், பாடலூர், சங்கராபுரம், சீர்காழி தலா 4 செ.மீ.,

வலங்கைமான், சேந்த மங்கலம், கள்ளக்குறிச்சி, பரங்கிப்பேட்டை, வாடிப்பட்டி, திருவாரூர், புள்ளம்பாடி, தாத்தையங்கார் பேட்டை, திருவையாறு, உளுந்தூர்பேட்டை, ஊத்தங்கரை, கொடவாசல், சாத்தனூர் அணைக்கட்டு தலா 3 செ.மீ. மற்றும் சில இடங்களில் மழை பெய்துள்ளது.
Tags:    

Similar News