செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 13281 கனஅடியாக அதிகரிப்பு

Published On 2017-09-25 10:40 GMT   |   Update On 2017-09-25 10:40 GMT
காவிரி ஆற்றில் திறந்துவிடப்பட்ட தண்ணீரால் மேட்டூர் அணை நீர்வரத்து இன்று மேலும் அதிகரித்து 13281 கனஅடியாக வந்து கொண்டிருக்கிறது.
சேலம்:

கரநாடகா மற்றும் கேரளாவில் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த தொடர் மழையால் கபினி அணை கடந்த சில நாட்களுக்கு முன்பு நிரம்பியது.

இதேபோல கிருஷ்ணராஜசாகர் அணையும் முழு கொள்ளளவை நெருங்கி வருகிறது. இதனால் அந்த அணைகளில் இருந்து கடந்த 19-ந்தேதி 19 ஆயிரம் கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் கடந்த 21-ந்தேதி மேட்டூர் அணைக்கு வந்து சேர்ந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று 8 ஆயிரத்து 597 கன அடி தண்ணீர் வந்தது. இன்று நீர்வரத்து மேலும் அதிகரித்து 13 ஆயிரத்து 281 கன அடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

அணையில் இருந்து கடந்த சில நாட்களாக காவிரி ஆற்றில் 2 ஆயிரம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இன்று காலை அந்த தண்ணீரின் அளவு ஆயிரம் கன அடியாக குறைக்கப்பட்டது. அணைக்கு 13 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வரும் நிலையில் அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் மட்டுமே வெளியேற்றப்படுவதால் அணையில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்து வருகிறது.

நேற்று 80.74 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் இன்று 81.69 அடியாக உயர்ந்தது. இதனால் ஒரே நாளில் ஒரு அடி உயர்ந்தது குறிப்பிடத்தக்கது. இனி வரும் நாட்களிலும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிக்கும் பட்சத்தில் அணையின் நீர்மட்டம் வேகமாக உயர வாய்ப்பு உள்ளது.

கர்நாடகா மற்றும் தமிழக நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று பெய்த மழையால் ஒகேனக்கல்லில் நேற்று இரவு 15 ஆயிரம் கன அடிக்கும் அதிகமாக தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் ஐந்தருவி உள்பட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

இன்று காலை நீர்வரத்து 11 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இதனால் சுற்றுலா பயணிகள் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். நீர்வரத்தை தொடர்ந்து பொதுப்பணித் துறை அதிகாரிகள் அந்த பகுதியில் கண்காணித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News