செய்திகள்

திருவேற்காட்டில் கடன் தகராறில் ஆட்டோ டிரைவர் கடத்தல்: மெக்கானிக் கைது

Published On 2017-09-25 07:37 GMT   |   Update On 2017-09-25 07:37 GMT
திருவேற்காட்டில் ரூ.2 லட்சம் கடன் தகராறில் ஆட்டோ டிரைவரை கடத்தியதால் மெக்கானிக் கைது செய்யப்பட்டார்.
பூந்தமல்லி:

திருவேற்காடு ஸ்ரீதேவி நகரில் வசித்து வருபவர் ஏழுமலை. இவரது மனைவி இந்திரா. இவர்களது மகன் அருண் பாண்டியன். ஷேர் ஆட்டோ டிரைவர். வேலப்பன் சாவடி பகுதியில் ஆட்டோ ஓட்டி வந்தார்.

இந்திரா அதே பகுதி அபிராமி நகரை சேர்ந்த மெக்கானிக் வெங்கடேசனிடம் ரூ.2 லட்சம் கடன் வாங்கி இருந்தார். இதனை அவர் திருப்பி கொடுக்கவில்லை என்று தெரிகிறது.

இதனால் வெங்கடேசனுக்கும், இந்திராவுக்கும் இடையே மோதல் ஏற்பட்டு வந்தது.

இந்த நிலையில் ஆட்டோ டிரைவர் அருண் பாண்டியனை கடத்தி கடனை வசூலிக்க வெங்கடேசன் முடிவு செய்தார்.

இது பற்றி அவர் திருச்சியை சேர்ந்த நண்பர் குமாரிடம் தெரிவித்தார். இதற்கு அவர் சம்மதம் தெரிவித்து நேற்று முன்தினம் தனது கூட்டாளிகள் மூலம் வேலப்பன்சாவடியில் இருந்த அருண் பாண்டியனை காரில் கடத்தினார்.

பின்னர் அவரை கோவைக்கு கொண்டு சென்றனர். அருண் பாண்டியனின் ஷேர் ஆட்டோவை வெங்கடேசன் ஓட்டி சென்று மறைத்து வைத்திருந்தார்.

இதற்கிடையே போகும் வழியிலேயே அருண் பாண்டியன் பெற்றோருக்கு செல்போன் மூலம் பேசினார்.

அப்போது, வெங்கடேசனுக்கு கொடுக்க வேண்டிய கடன் தொகையை கொடுத்து விடுங்கள். என்னை கடத்தி வைத்துள்ளனர் என்று தெரிவித்தார். இதனை கேட்ட அதிர்ச்சி அடைந்த ஏழுமலையும், இந்திராவும் திருவேற்காடு போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து திருவேற்காட்டில் இருந்த வெங்கடேசனை கைது செய்து விசாரித்தனர். அப்போது அவர் திருச்சியை சேர்ந்த நண்பர்கள் மூலம் அருண்பாண்டியனை கடத்தி வைத்திருப்பதை ஒப்புக்கொண்டார்.

இந்த நிலையில் வெங்கடேசன் போலீசில் சிக்கி இருப்பதை அறிந்த கடத்தல் கும்பல் கோவைக்கு செல்லும் வழியிலேயே அருண் பாண்டியனை விடுவித்து தப்பி சென்றுவிட்டனர்.

அருண் பாண்டியன் திருச்சியில் இருந்து நேற்று பிற்பகல் திருவேற்காடு வந்தார். அவரிடம் கடத்தல் கும்பல் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News