செய்திகள்

பொள்ளாச்சி தொகுதியில் 1 லட்சம் பனை மரகன்றுகள் நடவு செய்ய திட்டம்: துணை சபாநாயகர் ஜெயராமன்

Published On 2017-09-23 15:10 GMT   |   Update On 2017-09-23 15:10 GMT
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் பொள்ளாச்சி தொகுதியில் 1 லட்சம் பனை மரக்கன்றுகள் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது என்று துணை சபாநாயகர் கூறினார்.

பொள்ளாச்சி:

பொள்ளாச்சி வடக்கு பகுதியில் அமைந்துள்ளது தேவம்பாடி குளம். இந்த குளம் 40 ஏக்கர் பரப்பளவை கொண்டது. தூர்வாரப்பட்டு இந்த குளத்தில் துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இயற்கையுடன் இணைந்து எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவை கொண்டாடும் வகையில் புதிய திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்தார்.

அதன் அடிப்படையில் பொள்ளாச்சி தொகுதியில் 1 லட்சம் பனை மரக்கன்றுகள் நடவுசெய்ய திட்டமிட்டார். முதல் கட்டமாக தேவம்பாடி குளக்கரையில் 5 ஆயிரம் மரக்கன்றுகள் நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

முன்னாள் அமைச்சர் செ.தாமோதரன், கோவை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கித்தலைவர் சக்திவேல், விநாயகா தென்னை உற்பத்தியாளர் சங்கத்தலைவர் பத்மநாபன் முன்னிலை வகித்தனர். இதில் பொள்ளாச்சி ஜெயராமன் பேசியதாவது,

மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடுவோம் என மக்களுக்கு வாக்குறுதி அளித்துச்சென்றார். எதிர்பாராத விதமாக அவர் மறைந்துவிட்டார். இருந்தபோதும், அவரின் வாக்குறுதியை இன்று அ.தி.மு.க.வினர் நிறை வேற்றும் வகையில் எம்ஜிஆர் நூற்றாண்டுவிழாவை கொண்டாடி வருகின்றனர். எம்.ஜி.ஆர் உயிருடன் இருக்கும்போது, அவரது ஆட்சிக்காலத்தில் சத்துணவு திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மக்களுக்கு தந்தார். அவர் மறைந்த பிறகு அவரது சொத்துக்களை தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் வழங்கிச்சென்றார்.

இப்படி இருக்கும்போதும், மறைந்த பிறகும் தமிழக மக்களுக்கு பயன்படும் வகையில் எம்.ஜி.ஆரின் இயல்பு இருந்தது. அதுபோலவே பனை மரங்கள் இருக்கும்போது, கருப்பட்டி, நீரா, தெளிவு, ஓலை என பயன்தருவதுடன், பனை மரங்கள் இறந்த பிறகு வீடுகட்டுவதற்கும், பல்வேறு உபயோகங்களுக்கும் பயன்பட்டு நன்மை செய்கிறது. ஆனால், இந்த பனை மரங்கள் இன்று அழிந்து வருகின்றன. அவற்றை அழிவில் இருந்து மீட்கவும், குளக்கரையை பலப்படுத்தவும், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவை தற்போது உள்ள சந்ததி மக்களுக்கும், எதிர்கால சந்ததி மக்களுக்கு பயன்படும் வகையில் கொண்டாட பொள்ளாச்சி தொகுதியில் 1 லட்சம் பனை மரக்கன்றுகள் நடவு செய்ய திட்டமிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

நிகழ்ச்சியில் இயற்கை ஆர்வலர் முருகன், அதிமுக நிர்வாகிகள் பொன்னுச்சாமி, வீராசாமி, முருகேஷ், வக்கீல் தனசேகர், சசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News