search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனை மரக்கன்றுகள்"

    • உப்பு சுவை அதிகம் கொண்ட இந்த தரிசு நிலத்தில் வேறு எந்த தாவரங்களும் வளராத நிலையில் மண் பரிசோதனைக்கு பின்னர் பனைமரம் வளர்க்க முடிவு செய்யப்பட்டது.
    • இதுவரை 25 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக லால்குடி உதவி கலெக்டர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

    திருச்சி :

    தமிழக அரசு கற்பகத் தருவான பனை மரங்களை நடவு செய்ய தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது. இதில் பள்ளி, கல்லூரி மாணவர்களும், மரம் ஆர்வலர்களும் அதிக அளவில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.

    அதன் ஒரு பகுதியாக திருச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் லால்குடி அருகே உள்ள ஊட்டத்தூர் பகுதியில் உள்ள 400 ஏக்கர் தரிசு நிலத்தில் 2 லட்சம் பனைமரக் கன்றுகளை நடும் திட்டம் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தினை நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

    உப்பு சுவை அதிகம் கொண்ட இந்த தரிசு நிலத்தில் வேறு எந்த தாவரங்களும் வளராத நிலையில் மண் பரிசோதனைக்கு பின்னர் பனைமரம் வளர்க்க முடிவு செய்யப்பட்டது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மற்றும் வருவாய் துறை இணைந்து இந்த பனைமர காடு வளர்க்கும் திட்டத்தை மேற்கொண்டுள்ளனர். இதுவரை 25 ஆயிரம் பனை மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளதாக லால்குடி உதவி கலெக்டர் வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.

    இதில் மகாத்மா காந்தி வேலை உறுதி திட்டத்தைச் சேர்ந்த 1,100 பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் ஒரு மாத காலத்துக்குள் இரண்டு லட்சம் மரக்கன்றுகளையும் நடவு செய்ய பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. 12 அடி தூர இடைவெளியில் இந்த மரக்கன்றுகள் நடவு செய்யப்படுகிறது. இன்னும் 10 ஆண்டுகளில் இந்த பனை மரங்கள் மூலமாக வருவாய் ஈட்ட இயலும். அப்போது இப்பகுதியைச் சேர்ந்த கிராமத்து மக்களுக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எந்த சீதோஷ்ண நிலையிலும் நன்கு வளரும் பனை மரக்காடு விலங்குகள் மற்றும் பறவைகளுக்கும் புகலிடமாக மாற வாய்ப்புள்ளதாக பனைமர ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

    ×