செய்திகள்

சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை ரத்து - மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

Published On 2017-09-22 13:33 GMT   |   Update On 2017-09-22 13:33 GMT
நாளை நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை உயர்நீதிமன்ற மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் நாளை நடைபெற உள்ள சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வுக்கு எதிராக இருவர் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. 

அந்த மனுவில், கடந்த ஜூன் 26-ம் தேதி உடற்கல்வி ஓவியம், இசை, தையல் பயிற்சி போன்ற சிறப்பு ஆசிரியர்கள் நியமனத்துக்கான அறிவிக்கை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் சார்பில் வெளியிடப்பட்டது. இதில் உடற்கல்வி ஆசிரியர் பணிக்கான தகுதியில் மத்திய அரசின் என்.சி.டி.இ 2-வது அட்டவணை விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கு தகுதி நிர்ணயம் அறிவிக்கப்படவில்லை மாறாக பொதுவான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது ஏற்புடையதல்ல. தமிழகத்தில் ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளுக்கும் வெவ்வேறு தகுதிகளை என்.சி.டி.இ 2001 விதிப்படி நிர்ணயித்துள்ளது. 

இந்த விதிமுறைப்படி உடற்கல்வி ஆசிரியர்களுக்கான தேர்வு நடைபெறாவிட்டால் மத்திய அரசின் விதிமுறையை மீறியதாக அமையும். எனவே, உடற்கல்வி ஆசிரியர்களுக்கான பொதுவான தகுதியை ரத்து செய்துவிட்டு மத்திய அரசின் என்.சி.டி.இ விதி 2001-ன் படி, ஆரம்பப் பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி ஆகிய 3 நிலைகளில் உடற்கல்வி ஆசிரியர்களை தேர்வு செய்து நியமிக்க உத்தரவிட வேண்டும்'' எனக் குறிப்பிட்டிருந்தார். 

இந்த மனுவை விசாரித்த நீதிபதி ராஜா, நாளை நடைபெறவுள்ள உடற்கல்வி ஆசிரியர் தகுதி தேர்வுக்கு இடைக்காலத்தடை விதித்தும், பள்ளி கல்வித்துறை தேர்வாணைய தலைவர் பதிலளிக்க உத்தரவிட்டும் வழக்கு விசாரணை ஒத்திவைத்தார்.

இந்த தீர்ப்பை எதிர்த்து உடனடியாக 2 நீதிபதிகல் கொண்ட அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த வழக்கை உடனடியாக விசாரித்த நீதிபதிகள் தனிநீதிபதியின் இடைக்காலத்தடை உத்தரவை நீக்கி உத்தரவிட்டனர். இதையடுத்து, முன்னர் அறிவித்திருந்தபடி நாளை ( 23-ம் தேதி ) சிறப்பு ஆசிரியர் உடற்கல்வி தேர்வு நடைபெற உள்ளது.
Tags:    

Similar News