செய்திகள்

எழும்பூர் பாந்தியன் சாலையில் சி.பா.ஆதித்தனார் சிலை மீண்டும் நிறுவப்பட்டது

Published On 2017-09-20 07:29 GMT   |   Update On 2017-09-20 07:29 GMT
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவின் பேரில் எழும்பூரில் பாந்தியன் சாலையில் அதே இடத்தில் சி.பா.ஆதித்தனார் சிலை மீண்டும் நிறுவப்பட்டது.
சென்னை:

சென்னை எழும்பூரில் பாந்தியன் சாலையில் 5 சாலைகள் சந்திக்கும் பகுதியில் “தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்” திரு உருவச்சிலை கடந்த 1987-ம் ஆண்டு நிறுவப்பட்டது.

அப்போதைய முதல்- அமைச்சர் எம்.ஜி.ஆர். அந்த சிலையை திறந்து வைத்தார். அதோடு அந்த பகுதியில் உள்ள சாலைக்கு “சி.பா.ஆதித்தனார் சாலை” என்றும் பெயர் சூட்டி அறிவித்தார்.

ஒவ்வொரு ஆண்டும் சி.பா.ஆதித்தனாரின் பிறந்த நாள் மற்றும் நினைவு நாளில் அரசியல் கட்சித் தலைவர்கள், தமிழ் ஆர்வலர்கள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் அவரது சிலைக்கு மாலை அணிவித்து வணங்கி மரியாதை செலுத்துவது வழக்கம். இந்த நிலையில் அந்த சிலை அமைந்துள்ள 5 சாலை சந்திப்பு பகுதியை சீரமைத்து போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் 3 வட்ட பூங்காக்கள் அமைக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்தது.

இதையடுத்து அந்த சாலை சந்திப்பில் நிறுவப்பட்டிருந்த சி.பா.ஆதித்தனாரின் சிலை கடந்த மே மாதம் 29-ந்தேதி அகற்றப்பட்டது. அந்த சிலை தினத்தந்தி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டிருந்தது.

இதற்கிடையே 5 சாலை சந்திப்பு பகுதியில் எளிதான போக்குவரத்துக்கு ஏற்ற கட்டமைப்பு 2 மாதங்களில் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் 3 மாதத்துக்கு மேலாகியும் எந்த பணியும் நடைபெறவில்லை. இதையடுத்து எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, விடுதலை சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன், த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன், நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் உள்பட பல்வேறு கட்சி தலைவர்கள் மற்றும் பல அமைப்புகள் சார்பில் சி.பா.ஆதித்தனார் சிலையை உடனே நிறுவ வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இதை ஏற்று உடனே எழும்பூர் 5 சாலை சந்திப்பு பகுதியில் சி.பா.ஆதித்தனார் சிலையை நிறுவும் வகையில் பணிகளைத் தொடங்க கடந்த வாரம் உத்தரவிட்டார். அதன் பேரில் அந்த 5 சாலை சந்திப்பு பகுதியில் இரவு-பகலாக வட்ட பூங்கா அமைக்கும் பணிகள் நடைபெற்றன. சிலை நிறுவப்படும் பீடமும் கட்டப்பட்டது.


அந்த பகுதியில் புல்வெளி அமைக்கவும், சிக்னல்கள் வைப்பதற்கும் உரிய ஏற்பாடுகள் செய்து முடிக்கப்பட்டன.

இந்த நிலையில் நேற்றிரவு சி.பா.ஆதித்தனாரின் சிலை பாந்தியன் சாலை - ஆதித்தனார் சாலை உள்ளிட்ட 5 சாலைகள் சந்திக்கும் பகுதிக்கு பாதுகாப்புடன் எடுத்து வரப்பட்டது. பிறகு வட்ட பூங்கா நடுவே கட்டப்பட்ட பீடத்தில் சி.பா.ஆதித்தனாரின் சிலை நிறுவப்பட்டது.

கடந்த 30 ஆண்டுகளாக அந்த சிலை எந்த இடத்தில், எப்படி கம்பீரமாக நின்றதோ, அதே இடத்தில் மீண்டும் நிறுவப்பட்டுள்ளது. சிலை நிறுவும் பணி இன்று அதிகாலை நிறைவு பெற்றது.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 113-வது பிறந்த தினவிழா வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உறுதியளித்தப்படி ஒரு வாரத்துக்கு முன்னதாகவே ஆதித்தனார் சிலை நிறுவப்பட்டு விட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் சி.பா.ஆதித்தனாரின் பிறந்த தினத்தை ஆண்டு தோறும் உற்சாகத்துடன் கொண்டாடுவது போல இந்த ஆண்டும் சிறப்பாகக் கொண்டாட வழிவகை ஏற்பட்டுள்ளதாக பல்வேறு சமூக மற்றும் தமிழ் அமைப்பினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர்.
Tags:    

Similar News