செய்திகள்

நீலகிரியில் தொடர் மழைக்கு 30 இடங்களில் நிலச்சரிவு: 2 ஆயிரம் வாழைகள் வெள்ளத்தில் மூழ்கின

Published On 2017-09-19 15:54 GMT   |   Update On 2017-09-19 15:54 GMT
நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழையால் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மழை வெள்ளம் விவசாய தோட்டங்களில் புகுந்ததால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், தேயிலை தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
கூடலூர்:

நீலகிரியில், கூடலூர், தேவாலா பகுதிகளில் 2 வாரமாக பலத்த மழை பெய்து வருகிறது. நள்ளிரவில் அதிகரித்த கனமழையால், புத்தூர் வயல் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவில் தேன்வயல் ஆதிவாசி கிராமத்திற்குள் வெள்ளம் புகுந்தது. வீடுகளிலும் மழை வெள்ளம் புகுந்தது. இதனால் ஆதிவாசிகள் குடியிருப்பை விட்டு வெளியேறினர். தகவல் அறிந்ததும்

கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல் அப்பகுதிக்கு சென்று, 20 குழந்தைகள் உட்பட, 61 பேரை மீட்டு, புத்தூர் தேன் வயல் அரசு உயர்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் தற்காலிமாக தங்க வைத்தார். அவர்களுக்கு உணவு உள்ளிட்ட உதவிகள் வழங்கப்பட்டன. ஆர்.டி.ஓ., முருகையன், தாசில்தார் சிவகுமார் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர்.

பந்தலூரில் தொடரும் கன மழையால், பொன்னானி மற்றும் சோலாடி ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், புலியாடி பகுதியில் மழை வெள்ளம் விவசாய தோட்டங்களில் புகுந்ததால், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள், தேயிலை தோட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதனால் வாழைகள் அழுகி சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. மழை பாதிக்கப்பட்ட பகுதிகளை, தாசில்தார் மீனாட்சி சுந்தரம், வருவாய் ஆய்வாளர் செந்தில்குமார் ஆகியோர் பார்வையிட்டனர்.

ஊட்டி, மஞ்சூர், குன்னூர் பகுதிகளில் பெய்த மழையால், 30-க்கும் மேற்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. மஞ்சூர், இத்தலார், எமரால்டு, எடக்காடு பகுதியில் 5 இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது.

நீலகிரி மாவட்ட கலெக்டர் இன்னசென்ட் திவ்யா கூறும்போது, நீலகிரி மாவட்டத்தில் மழை தொடர்வதால், பேரிடர் மேலாண்மை குறித்த அனைத்து நடவடிக்கைகளும் முடுக்கி விடப்பட்டுள்ளன. குன்னூர், கூடலூர், பந்தலூர் பகுதிகளில், மக்களுக்கு உதவும் வகையில், அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன. நிவாரண முகாம்களும் தயார் நிலையில் உள்ளன. நெடுஞ்சாலை, உள்ளாட்சி, வருவாய், வனத்துறை, தீயணைப்பு துறைகள் தயார் நிலையில் உள்ளன என்றார்.
Tags:    

Similar News