செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல்: உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் பதில் மனு

Published On 2017-09-18 05:34 GMT   |   Update On 2017-09-18 05:34 GMT
உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக கூறி மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது.
சென்னை:

தமிழ்நாட்டில் 12 மாநகராட்சிகள், 123 நகரசபைகள், 529 டவுன் பஞ்சாயத்துகள், 385 பஞ்சாயத்து யூனியன்கள், 12 ஆயிரத்து 524 கிராம பஞ்சாயத்துகள் உள்ளன. இந்த உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு தடவை தேர்தல் நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

கடந்த ஆண்டு நடந்த தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து அக்டோபர் மாதம் உள்ளாட்சி தேர்தலை நடத்த அ.தி.மு.க. அரசு ஏற்பாடு செய்தது. ஆனால், முன்னாள் முதல்வர் ம்றைவை தொடர்ந்து உள்ளாட்சி தேர்தல் தள்ளிவைக்கப்பட்டது.

இதையடுத்து, தி.மு.க. சார்பில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கடந்த ஆண்டில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதுதொடர்பான விசாரணை ஓராண்டுக்கும் மேலாக நடந்து வந்தது.

இதற்கிடையே, தமிழகத்தில் நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தி முடிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கடந்த மாதம் உத்தரவிட்டது. இதுதொடர்பான அறிவிக்கையை செப்டம்பர் 18-ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும், நவம்பர் 17-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்த வேண்டும் எனவும் உத்தரவிட்டது.

இந்நிலையில், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பதில் சிக்கல் இருப்பதாக மாநில தேர்தல் ஆணையம் உயர் நீதிமன்றத்தில்  பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

மேலும் அந்த மனுவில், 1996ம் ஆண்டில் பிரிக்கப்பட்ட வார்டு முறைப்படி உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டுமா என்பதில் குழப்பம் உள்ளது. வார்டு வரையறை தொடர்பாக உயர் நீதிமன்றம் விளக்கம் அளிக்க வேண்டும். நண்பகலுக்குள் மற்றொரு கூடுதல் மனு தாக்கல் செய்யப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநில தேர்தல் ஆணையம் செப்டம்பர் 18-ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் கால அவகாசம் கொடுத்திருந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் பதில் மனு தாக்கல் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News