செய்திகள்

புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும்: கவர்னர் கிரண்பேடி

Published On 2017-08-12 07:12 GMT   |   Update On 2017-08-12 07:12 GMT
புதுவையில் உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசியல் கட்சிகள் ஒன்றிணைய வேண்டும் என கவர்னர் கிரண்பேடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
புதுச்சேரி:

புதுவை கவர்னர் கிரண்பேடி சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

புதுவையில் உள்ளாட்சி தேர்தல் நடத்த வேண்டியது அவசியமாக உள்ளது. அரசை விமர்சிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் இதனை நான் கூறவில்லை. என்னுடைய கவலையை தெரிவித்து கொள்கிறேன்.

புதுவை கொம்யூன் பஞ்சாயத்துக்களில் குறைவான வசதிகளும், குறைவான பணியாளர்கள் மட்டுமே உள்ளனர். இதனால் கிராமப்புறங்கள் புறக்கணிக்கப்பட்டு வருகிறது.

அந்த பகுதி மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளித்து கிராமப்புற வளர்ச்சியில் அரசு கவனம் செலுத்த வேண்டும். அப்போது தான் திறந்தவெளி கழிப்பிட ஒழிப்பு, குடிநீர் சேமிப்பு, திறன் மேம்பாடு, ஏரி, குளம் தூர்வாருதல், மரக்கன்று நடுதல், பள்ளி கல்வி ஆகியவற்றை முறையாக செயல்படுத்த முடியும்.

மேலும் கிராமப்புறங்களில் இருந்து மக்கள் நகர்புறத்துக்கு இடம்பெறுவதை தடுக்க முடியும். விவசாயத்தை காப்பாற்ற முடியும். 100 நாள்வேலை வாய்ப்பு திட்டத்தையும், சிறப்பாக செயல்படுத்த முடியும். எனவே உள்ளாட்சி தேர்தலை நடத்த அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.

பெண்களுக்கென தனியாக வார்டுகளை ஒதுக்கி உள்ளாட்சி தேர்தலை நடத்த அரசு அனைத்து முயற்சிகளையும் எடுக்க வேண்டும். இதற்கு அரசியல் கட்சிகள் மற்றும் அதிகாரிகளின் ஒத்துழைப்பு தேவை. இன்றைய சூழலில் இது உடனடியாக நடக்கும் என நான் நம்பவில்லை. இருப்பினும் மத்திய அரசிடம் இருந்து நிதியை பெற உள்ளாட்சி தேர்தலை நடத்துவதே ஏற்புடையாக இருக்கும்.

இவ்வாறு கவர்னர் அதில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News