செய்திகள்

புரோக்கர்களை வைத்து அனைத்து துறைகளிலும் ஊழல், வசூல் நடக்கிறது: அன்புமணி குற்றச்சாட்டு

Published On 2017-07-27 09:39 GMT   |   Update On 2017-07-27 09:39 GMT
அனைத்து துறைகளிலும் புரோக்கர்களை நியமித்து ஊழல், வசூல் நடப்பதாக அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டி உள்ளார்.
சென்னை:

பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி எம்.பி. சென்னையில் இன்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

“கரம் கோர்ப்போம்... காவிரியை காப்போம்...” என்ற பெயரில் பா.ம.க. சார்பில் ஒகேனக்கல்லில் இருந்து பூம்புகார் வரை 3 நாள் நடை பயணம் நாளை தொடங்குகிறது. நானே தலைமை தாங்கி செல்கிறேன்.

நாளை இரவு பவானியிலும், நாளை மறுநாள் திருச்சியிலும் பொதுக் கூட்டம் நடக்கிறது. 3-ம் நாள் பூம்புகாரில் நடைபயணம் நிறைவு பெறும்.

காவிரி ஆற்றில் கணக்கிட முடியாத அளவு கிளை ஆறுகள் உள்ளது. தமிழக ஜீவநதியான காவிரியில் மணல் கொள்ளை, கழிவுநீர் கலத்தல் போன்றவற்றால் சீரழிக்கப்படுகிறது. இதுபற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இந்த பயணம்.

தற்போது தமிழகத்தில் அரசு இருக்கிறதா? என்ற நிலையில்தான் உள்ளது. அனைத்து துறைகளிலும் புரோக்கர்களை நியமித்து ஊழல், வசூல்தான் நடக்கிறது. முடிந்தவரை கொள்ளையடித்து சென்று விடுவோம் என்று திட்டமிட்டு செயல்படுகிறார்கள்.

நீட் தேர்வில் அரசு மாணவர்களுக்கு துரோகம் இளைத்து விட்டது. ஜனாதிபதி தேர்தலை வைத்து வலியுறுத்தி விலக்குபெறும் வாய்ப்பை தவற விட்டார்கள். அடுத்து துணை ஜனாதிபதி தேர்தல் வர உள்ளது. இந்த வாய்ப்பையாவது பயன்படுத்தி மத்திய அரசிடம் நீட் தேர்வுக்கான விலக்கு கோர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News