செய்திகள்

சிவாஜி சிலையை மாற்றி அமைக்க கோரி முதல்வருக்கு காங்கிரசார் ஒரு லட்சம் மனுக்கள்

Published On 2017-07-24 08:17 GMT   |   Update On 2017-07-24 08:17 GMT
நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை கடற்கரை சாலையிலேயே மாற்றி அமைக்க முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒரு லட்சம் மனுக்கள் அனுப்ப காங்கிரசார் முடிவு செய்துள்ளனர்.
சென்னை:

சென்னை மெரீனா கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலையை மாற்றி கடற்கரை சாலையிலேயே காந்தி சிலை அருகே அமைக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் ஒரு லட்சம் பேரிடம் கோரிக்கை மனுக்கள் பெற்று முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளனர்.

காங்கிரஸ் கலைப் பிரிவு தலைவர் சந்திரசேகரன் மனுக்கள் அனுப்பும் நிகழ்ச்சியை தூத்துக்குடியில் இன்று தொடங்கி வைத்தார். அவர் கூறியதாவது:-

சென்னை கடற்கரை, காமராஜர் சாலையில் உள்ள நடிகர் திலகத்தின் சிலை அகற்றப்பட்டு மணிமண்டபத்தில் அமைக்கப்படும் என்று தமிழக அரசால் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரியார், காமராஜர், அண்ணா, அம்பேத்கர், எம்.ஜி.ஆர். உள்பட எல்லா தலைவர்களுக்குமே மணிமண்டபம் அல்லது நினைவிடம் தனியாகவும், சிலைகள் தனியாகவுமே உள்ளது.

அதுபோல நடிகர் திலகத்தின் மணிமண்டபமும், சிலையும் தனித்தனியாக அமைவதுதான் பொருத்தமாக இருக்கும் என்பது உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்கள் விருப்பம்.

நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் நடிகர் திலகம் சிலையை தற்போதிருக்கும் இடத்திலிருந்து மாற்றியமைக்கும்போது சென்னை கடற்கரை சாலையிலேயே காந்தி சிலைக்கும், காமராஜர் சிலைக்கும் நடுவில் மாற்றி அமைக்க வேண்டும் என்று தமிழகம் முழுவதும் ரசிகர்கள், பொதுமக்கள் மூலமாக ஒரு லட்சம் கோரிக்கை கடிதங்கள் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News