செய்திகள்

ஐ.பி.எஸ். அதிகாரிகள் கார்களில் நீடிக்கும் சுழல் விளக்குகள் அகற்ற தமிழக அரசு உத்தரவு

Published On 2017-07-23 06:54 GMT   |   Update On 2017-07-23 06:54 GMT
மத்திய அரசு உத்தரவை மீறி ஐ.பி.எஸ். அதிகாரிகள் கார்களில் நீடிக்கும் சுழல் விளக்குகள் அகற்ற தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை:

சுழல் விளக்கு வாகனங்களை ஒழுங்குப்படுத்தும் வகையில் அரசு உயர் அதிகாரிகள் சிவப்பு மற்றும் நீலநிற சுழல் விளக்குகளை பயன்படுத்த மத்திய அரசின் உள்துறை தடை விதித்தது.

சுழல் விளக்குகளை மே மாதம் 1-ந்தேதிக்குள் அகற்றுமாறு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.

இதன்படி தமிழ்நாட்டில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளின் வாகனங்களில் பொருத்தப்பட்டு இருந்த சுழல் விளக்குகள் அகற்றப்பட்டன.

ஆனாலும் மத்திய அரசின் உத்தரவை மீறி பல ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கார்களில் நீல நிற சுழல் விளக்குகள் நீடித்து வந்தன. ஐ.பி.எஸ். அதிகாரிகளின் கார்களில் நீலநிற சுழல் விளக்குகள் இருப்பது குறித்து தமிழக அரசின் போக்குவரத்து துறை உள்துறைக்கு கடிதம் அனுப்பியது.

இதை தொடர்ந்து தமிழக அரசின் உள்துறை கூடுதல் செயலாளர் நிரஞ்சன்ஷா, போலீஸ் டி.ஜி.பி. டி.கே.ராஜேந்திரன், சென்னை பெருநகர போலீஸ் கமி‌ஷனர் ஏ.கே. விஸ்வநாதன் ஆகியோருக்கு ஒரு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை மற்றும் மாநிலத்தின் இதர பகுதிகளில் காவல் துறையில் பணியாற்றும் சில ஐ.பி.எஸ். அதிகாரிகள் தங்களது வாகனங்களில் இன்னும் நீலநிற சுழல் விளக்குகள் பொருத்தி இருப்பது தெரியவந்துள்ளது.

மே 1-ந்தேதி அரசு பிறப்பித்த உத்தரவை மீறியதாகும். எனவே சுழல் விளக்குகளை அகற்ற வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை தொடர்ந்து காவல் துறை உயர் அதிகாரிகள் தங்களது வாகனங்களில் பொருத்தி இருந்த நீலநிற சுழல் விளக்குகளை அகற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் அறிவுறுத்தலின் பேரில் ஏற்கனவே அமைச்சர்கள ஐகோர்ட்டு நீதிபதிகள், மாவட்ட நீதிபதிகள், ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் ஆகியோர் கார்களில் பொருத்தப்பட்டு இருந்த சிவப்பு நிற சுழல் விளக்குகள் அகற்றப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News