செய்திகள்

பிளஸ்2 மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை என்பது உத்தரவாதம் கிடையாது: கே.பி. அன்பழகன்

Published On 2017-07-21 14:10 GMT   |   Update On 2017-07-21 14:11 GMT
அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் மாணவர் சேர்க்கை நடைபெறும் என்பது உத்தரவாதமில்லை என உயர்கல்வித்துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியிள்ளார்.
சென்னை:

நாடு முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் நுழைவுத்தேர்வு நடத்தப்படுவது போல, பொறியியல் படிப்புகளுக்கும் பொது நுழைவுத் தேர்வு நடத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி, அடுத்த ஆண்டு முதல், நாடு முழுவதும் பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்து இருந்தது. இதற்கு, பல்வேறு மாநிலங்களில் எதிர்ப்புகள் எழுந்தன. பொறியியல் படிப்புகளுக்கு நுழைவுத்தேர்வு நடந்தால், கிராமப்புற மாணவர்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள், தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழக அரசு ஏற்கனவே மத்திய அரசுக்கு கடிதம் எழுதி உள்ளது.

இந்நிலையில் தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் சென்னையில் இன்று செய்தியாளார்களை சந்தித்தார். அப்போது பொறியியல் மாணவர் சேர்க்கை தொடர்பாக அவர் கூறியதாவது:-

அடுத்த ஆண்டு 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பொறியியல் சேர்க்கை நடைபெறும் என உத்தரவாதம் அளிக்க முடியாது. 12-ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையிலே தமிழகத்தில் பொறியியல் கலந்தாய்வு நடத்த வேண்டும் என்பதே தமிழக அரசின் எண்ணம் ஆகும். ஆனால் பொறியியல் படிப்பிற்கும் நீட் தேர்வு என மத்திய அரசு கூறுகிறது. தமிழகத்தில் 12-ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலே மாணவர்கள் சேர்க்கை இருக்க வேண்டும் என எங்களது தரப்பில் வலியுறுத்தப்பட்டது என்றார்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News