செய்திகள்

சென்னையில் குட்கா-பான் மசாலா விற்ற 421 பேர் கைது

Published On 2017-07-21 09:27 GMT   |   Update On 2017-07-21 09:27 GMT
சென்னையில் குட்கா-பான் மசாலா விற்ற 421 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை:

சென்னையில் குட்கா, பான் மசாலா போன்ற போதை பொருட்கள் விற்பனையை கண்காணித்து நடவடிக்கை எடுக்க போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

இதையடுத்து சென்னை நகர் முழுவதும் தடை செய்யப்பட்ட மாவா, ஹான்ஸ் மற்றும் பான் மசாலா பாக்கெட்டுகள் விற்பவர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை கடந்த 2 நாட்களாக நடந்தது.

இதில் வடக்கு மண்டலத்தில் 55 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 18 பேரும், மேற்கு மண்டலத்தில் 286 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 113 பேரும் மற்றும் கிழக்கு மண்டலத்தில் 65 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 65 பேரும், தெற்கு மண்டலத்தில் 204 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 225 பேரும் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

கடந்த 2 நாட்களில் மட்டும் சென்னை மாநகரில் தீவிர சோதனைகள் மேற்கொண்டு 610 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 421 பேர் கைது செய்யப்பட்டு, 12,305 பான்மசாலா மற்றும் மாவா பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தடை செய்யப்பட்ட மாவா, ஹான்ஸ், பான் மசாலா பாக் கெட்டுகள் மற்றும் புகையிலை பொருட்கள் தயாரிப்பவர்களையும் விற்பனை செய்பவர்களையும் தொடர்ந்து கண்காணித்து கைது செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என போலீசார் தெரிவித்து உள்ளனர்.

Tags:    

Similar News