செய்திகள்

சென்னை மெட்ரோ ரெயில் சேவை பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படும்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

Published On 2017-07-20 00:45 GMT   |   Update On 2017-07-20 00:45 GMT
சென்னையில் மெட்ரோ ரெயில் 4-வது வழித்தடம் பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படும் என்றும், கோவையில் புதிதாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்படும் என்றும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.
சென்னை:

சென்னையில் மெட்ரோ ரெயில் 4-வது வழித்தடம் பூந்தமல்லி வரை நீட்டிக்கப்படும் என்றும், கோவையில் புதிதாக மெட்ரோ ரெயில் திட்டம் தொடங்கப்படும் என்றும் சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-

மெட்ரோ ரெயில் திட்டத்தின், இரண்டாம் கட்டமாக 45.77 கி.மீ. நீளத்தில் மாதவரத்திலிருந்து சிறுசேரி வரையிலும், 17.12 கி.மீ. நீளத்தில் சென்னை புறநகர் பேருந்து நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரையிலும் மற்றும் 44.66 கி.மீ. நீளத்தில் மாதவரத்திலிருந்து சோழிங்கநல்லூர் வரையிலும் மொத்தம் 107.55 கி.மீ. நீளத்தில் மூன்று மெட்ரோ ரெயில் வழித்தடங்களை 85,047 கோடி ரூபாய் என்ற உத்தேச மதிப்பீட்டளவில் செயல்படுத்துவதற்கு மாநில அரசின் கொள்கை அளவிலான ஒப்புதல் வழங்கப்பட்டு மத்திய அரசின் ஒப்புதலுக்காகவும், நிதியுதவிக்காகவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இதில் கலங்கரை விளக்கத்தில் இருந்து வடபழனி வழியாக சென்னை புறநகர் பேருந்து நிலையம் வரை அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள 4-வது வழித்தடத்தினை விருகம்பாக்கம் மற்றும் வளசரவாக்கம் ஆகிய பகுதிகளில் ஆற்காடு சாலையில் அதிகரித்து வரும் போக்குவரத்து நெரிசலைக் கருத்தில் கொண்டு, கலங்கரை விளக்கம் முதல் வடபழனி, போரூர் வழியாக பூந்தமல்லி வரை நீட்டிப்பு செய்ய அரசு முடிவெடுத்துள்ளது. இதற்கான விரிவான துணை திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும். இத்திட்டத்தினை செயல்படுத்துவதால் சுமார் 3,850 கோடி ரூபாய் கூடுதல் செலவாகும்.

சென்னையைத் தொடர்ந்து, கோவையில் பெருகி வரும் போக்குவரத்து நெரிசலை தீர்க்கும் வகையில் மெட்ரோ ரெயில் திட்டம் செயல்படுத்தப்படும். இதற்கான விரிவான சாத்தியக்கூறு மற்றும் திட்ட அறிக்கையை தயாரிக்கும் பணியினை சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் மேற்கொள்ளும். இத்திட்டத்திற்கு மத்திய அரசின் மூலமாக ஜெர்மன் நிதி நிறுவனமான கே.எப்.டபுள்யூ-விடம் நிதியுதவி பெறப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார். 
Tags:    

Similar News