செய்திகள்

அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் கலந்தாய்வு தொடங்கியது

Published On 2017-07-17 06:04 GMT   |   Update On 2017-07-17 06:04 GMT
சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் படிப்பில் சேர தொழில் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
சென்னை:

தமிழகத்தில் 523 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த கல்லூரிகளில் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன.

மருத்துவ கலந்தாய்வு முடிந்த பிறகு தான் பொறியியல் கவுன்சிலிங் வழக்கமாக தொடங்கும். இந்த வருடம் நீட் தேர்வினால் மருத்துவ கலந்தாய்வு தாமதமாகி உள்ளது.

இதனால் மருத்துவ கவுன்சிலிங் தொடங்குவதற்கு முன்பே பொறியியல் கவுன்சிலிங் தொடங்கியது. சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் தொழில் பிரிவுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

19-ந் தேதி மாற்றுத்திறனாளிகளுக்கும், 20-ந் தேதி விளையாட்டு பிரிவினருக்கும் சான்றிதழ் சரிபார்ப்பும், 21-ந் தேதி விளையாட்டு பிரிவு கலந்தாய்வும் நடைபெறுகிறது. பொதுப் பிரிவினருக்கான கவுன்சிலிங் 23-ந் தேதி தொடங்கி ஆகஸ்டு 11-ந் தேதி வரை நடக்கிறது.

கலந்தாய்வுக்கான அழைப்பு கடிதம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அவற்றை மாணவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.



பொறியியல் படிப்பில் சேர 1 லட்சத்து 41 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்க வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்கள், பெற்றோர்களுக்கு அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் தங்கிக்கொள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

இன்று நடைபெறுகின்ற தொழில் பிரிவு கலந்தாய்வில் 6,224 இடங்களுக்கு தகுதியான 2084 மாணவர்கள் மட்டுமே அழைக்கப்பட்டுள்ளனர். கலந்தாய்வு தினமும் காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

தினமும் 9 பிரிவாக நடப்பதால் இந்த ஆண்டு முன் கூட்டியே கலந்தாய்வு நிறைவு பெறும் என்று கூறப்படுகிறது. கலந்தாய்வில் பங்கேற்க வரும் மாணவர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாக வரவேண்டும்.

கல்லூரி காலி இடங்கள் பற்றி தெரிந்து கொள்ள திரைகள் அமைக்கப்பட்டுள்ளன. குடிநீர்வசதி, கழிப்பிட வசதி செய்யப்பட்டுள்ளன.
Tags:    

Similar News