செய்திகள்

‘ஜி.எஸ்.டி.யை முதலில் அறிமுகம் செய்துவிட்டு குறை சொல்வதா?’: ப.சிதம்பரம் மீது வெங்கையா நாயுடு பாய்ச்சல்

Published On 2017-07-09 09:08 GMT   |   Update On 2017-07-09 09:13 GMT
‘ஜி.எஸ்.டி.யை முதலில் அறிமுகம் செய்துவிட்டு குறை சொல்வதா?’ என ப.சிதம்பரம் மீது மத்திய மந்திரி வெங்கையா நாயுடு குற்றஞ்சாட்டியுள்ளார்.

சென்னை:

சென்னை கலைவாணர் அரங்கில் ஜி.எஸ்.டி. விளக்க கருத்தரங்கம் இன்று நடந்தது.

கருத்தரங்கிற்கு தமிழக பா.ஜனதா தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தொழிலதிபர்கள், வர்த்தகர்கள், மாணவ- மாணவிகள், பொது மக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

மத்திய மந்திரி வெங்கையா நாயுடு கலந்து கொண்டு ஜி.எஸ்.டி. வரி தொடர்பாக விளக்கம் அளித்தார். தொடர்ந்து அனைவரது கேள்விக்கும் ஜி.எஸ்.டி. முதன்மை செயலாளர் கபிலன் பதில் அளித்தார்.

முன்னதாக வெங்கையா நாயுடு நிருபர்களிடம் கூறியதாவது:-

நாட்டை சரியான பாதையில் வழி நடத்துவதும், ஏழை-எளிய மக்களுக்கு உதவுவதும்தான் பிரதமர் மோடியின் நோக்கம். பிரதமர் யோஜனா திட்டத்தின் கீழ் கடந்த 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் 21 லட்சம் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளன.


ஒரே நாடு. ஒரே வரி என்ற சிந்தனையில் கொண்டு வரப்பட்டுள்ள ஜி.எஸ்.டி. வரிமுறை நாட்டில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். இந்த வரி திட்டத்தை முதலில் அறிமுகம் செய்தவர் ப.சிதம்பரம்தான். அமல்படுத்திய போதும் தெளிவாக இருப்பதாக குறிப்பிட்டார். ஆனால் இப்போது குறை கூறுகிறார். மாற்றி மாற்றி பேசுவது காங்கிரசுக்கு கைவந்த கலைதான்.

ஜி.எஸ்.டி. வரி விதிப்பால் சாதாரண மக்களுக்கு எந்த பாதிப்பும் வராது. விலைவாசி கட்டுக்குள் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கருத்தரங்கில் தொழிலதிபர் நல்லிகுப்புசாமி, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரி பாலசந்திரன், நடிகர் ராம்குமார், பா.ஜனதா நிர்வாகிகள் சக்கரவர்த்தி, பி.டி.அரசகுமார், வக்கீல் பிரிவு மாநில செயலாளர் சி.தங்கமணி, எம்.என்.ராஜா, கருநாகராஜன், செம்பாக்கம் வேத சுப்பிரமணியன், தனஞ்செயன், காளிதாஸ், டால்பின் ஸ்ரீதரன், ஜெய்சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News