செய்திகள்

தனியார் பால் அனைத்திலும் கலப்படம் என்று கூறவில்லை: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

Published On 2017-06-28 06:06 GMT   |   Update On 2017-06-28 06:06 GMT
தனியார் பால் அனைத்திலும் கலப்படம் உள்ளது என்று நான் கூறவில்லை என பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார்.
சென்னை:

தனியார் பாலில் கலப்படம் உள்ளது என்று பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு குற்றச்சாட்டுகளை கூறி வந்தார்.

அதை ஆய்வுக்கு அனுப்பியதாகவும், ஆய்வு முடிவில் தனியார் பாலில் கலப்படம் இருப்பது உறுதி செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் பெரிய நிறுவனங்களின் பால் பவுடரில் கலப்படம் இருப்பதால் அதுகுறித்து பிரதமரிடம் புகார் செய்யப் போவதாகவும் அவர் நேற்று பேட்டி அளித்தார்.

கலப்படம் உள்ள தனியார் நிறுவனங்களின் பால் பவுடர் பாக்கெட்டுகளை நிருபர்களிடம் காட்டி இந்த பால்பவுடர்களில் காஸ்டிக்சோடா பிளிச்சிங் பவுடர் கலக்கப்பட்டுள்ளது. இதை சாப்பிடும் குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு, காலரா போன்ற நோய்கள் ஏற்படும் என்ற பரபரப்பு தகவலையும் வெளியிட்டார்.

இதனால் குழந்தைகளுக்கு பால் பவுடர் கொடுக்கும் பெண்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று சென்னை நந்தனத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



தனியார் பால் அனைத்திலும் கலப்படம் உள்ளது என்று நான் கூறவில்லை. சில நிறுவனங்களின் பாலில் கலப்படம் இல்லை. இதே போல் ஆவின் பால், தயிர் போன்றவற்றில் எந்தவித கலப்படமும் இல்லை.

தனியார் பாலில் கலப்படம் என்று நான் கூறியதை பால் முகவர்கள் சங்கத்தில் ஒருவர் மட்டுமே எதிர்க்கிறார். அந்த சங்கத்தை சேர்ந்த மற்றவர்கள் யாரும் எதிர்க்கவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News