செய்திகள்

அதிகார வெறி கவர்னரின் கண்ணை மறைக்கிறது: இந்திய கம்யூனிஸ்டு குற்றச்சாட்டு

Published On 2017-06-24 11:14 GMT   |   Update On 2017-06-24 11:14 GMT
அதிகார வெறி கவர்னர் கிரண்பேடியின் கண்ணை மறைக்கிறது என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விஸ்வநாதன் குற்றம் சாட்டினார்.
புதுச்சேரி:

இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் விஸ்வநாதன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மருத்துவ பட்டமேற்படிப்பு மாணவர் சேர்க்கையில் முறைகேடும், தவறும் நடந்திருப்பதாக கவர்னர் கூறியுள்ளார்.

இதுதொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார். இதை இந்திய கம்யூனிஸ்டு வரவேற்கிறது. சட்ட மன்றத்தில் என்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியில் ஆண்டுதோறும் மருத்துவ மாணவர் சேர்க்கையில் ரூ.50 கோடி ஊழல் நடந்ததாக முதல்-அமைச்சர் நாராயணசாமி பகிரங்கமாக கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் ஏற்கனவே இதுபற்றி ஓய்வுபெற்ற நீதிபதி விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வந்தோம்.

தற்போது கவர்னர் சி.பி.ஐ. விசாரணை கோரியிருப்பதால் நாங்களும் சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். ஆனால், 10 ஆண்டுகால மாணவர் சேர்க்கை குறித்து விசாரிக்க வேண்டும். 2012-ல் லோக்பால் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

டெல்லியில் லோக்பால் சட்டம் கொண்டுவர கவர்னர் கிரண்பேடி பல போராட்டங்களை நடத்தினார். ஆனால், புதுவையில் இதுவரை லோக்பால் சட்டம் நிறை வேற்றப்படவில்லை. லோக் ஆயுக்தா குழுவும் அமைக்கப்படவில்லை. இதுதொடர்பாக கவர்னர் வாய்மூடி மவுனமாக உள்ளார்.

ஊழலுக்கு எதிராக குரல் கொடுப்பவர் என தன்னை காட்டி கொள்ளும் கவர்னர் ஏன் இதில் அமைதி காக்கிறார்? ஜனநாயகத்தை பொறுத்தவரை மக்களுக்குத்தான் அதிகாரம். கடந்த 1963-ம் ஆண்டு புதுவையில் 3 லட்சம் மக்கள் தொகை இருந்தது. 3 ஆயிரம் அரசு ஊழியர்கள் பணி செய்தனர். ஆனால் தற்போது 30 ஆயிரம் அரசு ஊழியர்களும், 13 லட்சம் மக்கள் தொகையும் உள்ளது.

பல சட்டங்கள் திருத்தப்பட்டுள்ளது. புதிதாக கொண்டுவரப்பட்டுள்ளது. இதனால் கவர்னரின் நிதி அதிகாரம் என்பதை ரூ.50 கோடியிலிருந்து ரூ.100 கோடியாக உயர்த்த வேண்டும்.

அதை விடுத்து நிதி அதிகாரத்தை குறைப்பது மக்கள் விரோத செயல். விவசாயிகள் கடனை தள்ளுபடி செய்வதை கவர்னர் ஏன் தடுக்கிறார்?

விமான சேவையை தொடங்கும் கோப்புக்கு ஏன் அனுமதி தர மறுக்கிறார்? தியாகிகள் பென்‌ஷன் தொகையை உயர்த்த ஏன் மறுக்கிறார்? இவை மக்களுக்கான, மாநில வளர்ச்சிக்கான திட்டங்கள் இல்லையா? இதற்கு கவர்னர்தான் விளக்கம் அளிக்க வேண்டும். அதிகார வெறி கவர்னரின் கண்ணை மறைக்க கூடாது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News