செய்திகள்

பழனி அருகே அனுமதியின்றி மணல் அள்ளிய லாரி, எந்திரங்கள் பறிமுதல்

Published On 2017-06-22 11:15 GMT   |   Update On 2017-06-22 11:15 GMT
பழனி அருகே அனுமதி இன்றி மணல் அள்ளியதால் லாரி மற்றும் எந்திரங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பழனி:

பழனி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியில் உள்ள குளங்களில் விவசாயத்திற்காக வண்டல் மண் எடுத்துக்கொள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது. உரிய ஆவணங்களை வட்டாட்சியரிடம் கொடுத்து வண்டல் மண் அள்ளுவதற்கான அனுமதி பெற்று விவசாயிகள் தங்கள் நிலங்களுக்கு மணல் அள்ளி வருகின்றனர்.

இதை சிலர் தவறாகப் பயன்படுத்தி செங்கல் சூளைகளுக்கு வண்டல் மண் அனுமதியின்றி எடுத்து செல்வதாக வந்த புகாரின்பேரில் தாசில்தார் ராஜேந்திரன், ஆய்வு பணிமேற்கொண்டு வருகிறார்.

பாலசமுத்திரத்தில் இயங்கி வரும் தனியார் செங்கல் சூளைக்கு அய்யம்புள்ளி குளத்தில் அனுமதி இன்றி மணல் அள்ளுவதாக தகவல் கிடைத்ததின் பேரில் தாசில்தார் ராஜேந்திரன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனையிட்டார். அங்கு 4 பொக்லைன் எந்திரங்கள், 2 டிப்பர் லாரிகள் மூலம் அய்யம்புள்ளி குளத்தில் மண் அள்ளிக் கொண்டு இருந்ததை கண்டு அவர்களிடம் அனுமதி இருக்கிறதா என ஆய்வு நடத்தினார். அவர்களிடம் எவ்வித ஆவணங்களும் இல்லாததால் வாகனங்கள் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட வாகனங்கள் பழனி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது. வாகனங்களுக்கு ரூ.25 ஆயிரம் வீதம் ஆறு வாகனங்களுக்கு ரூ. 1 லட்சத்து 50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News