செய்திகள்

பாதுகாப்பு வழங்க தவறிய சேலம் போலீஸ் கமி‌ஷனர் நேரில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு

Published On 2017-06-22 10:49 GMT   |   Update On 2017-06-22 10:49 GMT
ஆக்கிரமிப்புகளை அகற்றும்போது பாதுகாப்பு வழங்க தவறிய சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் ஜூலை 4-ந் தேதி கோர்ட்டில் நேரில் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

சேலத்தை சேர்ந்தவர் ராஜசேகர். இவர், சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கில், சேலத்தில் உள்ள ராஜகணபதி கோவிலை சுற்றி ஏராளமான ஆக்கிரமிப்புகள் உள்ளன. பொதுஇடத்தை ஆக்கிரமித்து, பலர் கடைகளை வைத்துள்ளனர். இதுகுறித்து நான் தொடர்ந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற சேலம் தாசில்தாருக்கு உத்தரவிட்டது.

இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றும் போது, அதிகாரிகளுக்கு தகுந்த பாதுகாப்பை வழங்கவேண்டும் என்று சேலம் போலீஸ் கமி‌ஷனருக்கு உத்தரவிட்டிருந்தது. தீயணைப்புத்துறை அதிகாரிகள், இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் இந்த பணிக்கு உதவிகரமாக இருக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

கடந்த மே 31ந் தேதி ஆக்கிரமிப்புகளை அகற்ற சேலம் தாசில்தாருடன் சென்றபோது, போலீசார் பாதுகாப்பு வழங்கவில்லை. பொதுஇடத்தை ஆக்கிரமித்து கடை வைத்திருப்பவர்கள், என்னை சுற்றி வளைத்து தாக்க முயற்சித்தனர்’ என்று கூறியிருந்தார்.

இதேபோல அறிக்கையை சேலம் தாசில்தாரும் தாக்கல் செய்தார். இவற்றை படித்து பார்த்த நீதிபதி என்.கிருபாகரன், போலீசார் உள்ளிட்ட அதிகாரிகளின் செயல்களுக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

தாசில்தார் தாக்கல் செய்துள்ள மனுவில், ஆக்கிரமிப்புகளை அகற்ற சென்றபோது போலீசார் பாதுகாப்பு வழங்கவில்லை. பிற துறை அதிகாரிகளும் அங்கு வரவில்லை என்று கூறியுள்ளார். இதை பார்க்கும்போது, போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள், இந்த கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தாமல் இருந்துள்ளது தெளிவாகுகிறது. அதிகாரிகளின் இந்த செயல், கோர்ட்டு அவமதிப்பாகும்.

எனவே, இந்த வழக்கை ஜூலை 4ந் தேதிக்கு தள்ளிவைக்கிறேன். அன்று சேலம் போலீஸ் கமி‌ஷனர், சட்டஒழுங்கு உதவி கமி‌ஷனர், போக்குவரத்து பிரிவு உதவி கமி‌ஷனர், தீயணைப்பு துறை மண்டல அதிகாரி, இந்து சமய அறநிலையத்துறை செயல் பொறியாளர் ஆகியோர் நேரில் ஆஜராகி பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்.

இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
Tags:    

Similar News