செய்திகள்

காட்டு யானை தாக்கியதில் உயிர் இழந்த 2 பேரின் குடும்பத்துக்கு தலா ரூ.4 லட்சம்: எடப்பாடி பழனிசாமி உத்தரவு

Published On 2017-06-19 19:40 GMT   |   Update On 2017-06-19 19:40 GMT
காட்டு யானை தாக்கி உயிரிழந்த 2 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை:

தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தேனி மாவட்டம் உத்தமபாளையம் வட்டம் தேவாரம் கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் என்பவரின் மகன் முருகன் கடந்த 10-ந்தேதி தனது குடும்பத்தாருடன் தோட்டத்திற்கு காவலுக்கு சென்ற போது, காட்டு யானை தாக்கியதில் முருகனுடைய மகன் அழகேசன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற செய்தியையும், கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை பேலக்கரை கிராமத்தைச் சேர்ந்த மோட்டப்பா என்பவரின் மகன் வெங்கடேஷ் கடந்த 14-ந்தேதி வனப்பகுதி வழியாக ஒட்டர்குப்பம் கிராமத்திற்கு சென்று கொண்டிருந்த போது, எதிர்பாராமல் யானை தாக்கியதில், பலத்த காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற செய்தியையும் அறிந்து நான் மிகவும் துயரம் அடைந்தேன்.

காட்டு யானை தாக்கி உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் அழகேசன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். இந்தத் துயர சம்பவத்தில் உயிரிழந்த வெங்கடேஷ் மற்றும் அழகேசன் ஆகியோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம் வனத்துறை மூலம் உடனடியாக வழங்க உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். 
Tags:    

Similar News