search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "காட்டு யானை தாக்குதல்"

    • காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராத்திற்குள் இன்று அதிகாலை யானை புகுந்தது.
    • ஒற்றை யானை ஆடு, மாடுகளை தும்பிக்கையால் தூக்கி வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    வேலூர்:

    ஆந்திர மாநிலம், சித்தூர் மாவட்டம் குடிபாலா மண்டலத்திற்கு உட்பட்ட ராமாபுரம் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றி திரிந்தது.

    அங்குள்ள பயிர்களை நாசம் செய்த ஒற்றை யானை விவசாய நிலத்தில் தண்ணீர் பாய்ச்சி கொண்டிருந்த, கணவன், மனைவி உள்பட 3 பேரை மிதித்துக் கொன்றது.

    தகவல் அறிந்து வந்த ஆந்திர வனத்துறையினர் பட்டாசு வெடித்து யானையை விரட்டினர். இதனை அடுத்து யானை நேற்று ஆந்திரா எல்லைப் பகுதியை கடந்து தமிழக எல்லைப் பகுதிக்குள் புகுந்தது. வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே உள்ள மகிமண்டலம் வன பகுதியில் சுற்றி திரிந்தது.

    தமிழகம்-ஆந்திரா எல்லை பகுதியான காட்பாடி, பொன்னை, மகிமண்டலம் ஆகிய பகுதிகளில் ஆக்ரோஷமாக சுற்றித்திரிந்த யானையை ஆடு மேய்ப்பவர்கள் பார்த்து அச்சமடைந்தனர்.

    காட்பாடி அடுத்த மகிமண்டலம் அருகே உள்ள பெரியபோடிநத்தம் கிராத்திற்குள் இன்று அதிகாலை யானை புகுந்தது.

    அங்குள்ள சூளைமேட்டு பகுதியைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (வயது 60), விவசாயி. இவரது மனைவி வசந்தா (54).

    இவர்கள் வனப்பகுதியில் ஒட்டியுள்ள தனது வீட்டில் ஆடுகள் மற்றும் மாடுகளை வளர்த்து வருகின்றனர். பாலகிருஷ்ணன் மற்றும் வசந்தா ஆகியோர் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர்.

    இந்தநிலையில் இன்று அதிகாலை 5 மணி அளவில் ஒற்றை யானை அவர்களது ஆட்டு கொட்டகைக்குள் புகுந்தது. அதனை கண்டு ஆடுகள் நீண்ட நேரம் கத்திக்கொண்டிருந்தது. அலறல் சத்தம் கேட்டு வசந்தா வெளியே வந்து பார்த்தார்.

    அப்போது ஒற்றை யானை ஆடு, மாடுகளை தும்பிக்கையால் தூக்கி வீசியதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதில் ஒரு ஆடு துடிதுடித்து இறந்து போனது.

    உடனடியாக வசந்தா கூச்சலிட்டபடி யானையை விரட்ட முயன்றார். பாலகிருஷ்ணன் வீட்டிலிருந்து வெளியே வருவதற்குள், யானை வசந்தாவை தும்பிக்கையால் தூக்கி வீசி மிதித்தது. இதனைப் பார்த்த பாலகிருஷ்ணன், அக்கம்பக்கத்தினர் உதவியுடன் கூச்சலிட்டு யானையை விரட்டினார்.

    இது குறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த மருத்துவ குழுவினர் பரிசோதித்தபோது வசந்தா ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த மேல்பாடி போலீசார் மற்றும் ஆற்காடு வனத்துறையினர் விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    வனத்துறையினர் 15 பேர் கொண்ட குழுவினர் யானையை கண்காணித்து வனப்பகுதியில் விரட்டும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அவர்களுடன் யானை விரட்டுவதற்கு உதவியாக ஆந்திரா வனத்துறை அதிகாரிகளும் ஈடுபட்டுள்ளனர்.

    மூதாட்டி மற்றும் ஆட்டுக்குட்டியை கொன்ற காட்டுயானை வனப்பகுதிக்குள் முகாமிட்டுள்ளது.

    வனத்துறை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒற்றை யானையை தேடி விரட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தமிழக-ஆந்திரா எல்லைப்பகுதியில் உள்ள காட்பாடி, பொன்னை, மேல்பாடி, போடி நத்தம் உள்ளிட்ட பகுதி மக்கள் வனப்பகுதிக்குள் செல்லக்கூடாது என எச்சரிக்கை விடுத்துள்ளோம்.

    4 பேரை கொன்ற இந்த ஒற்றை யானையை காட்டுப்பகுதியில் விரட்டுவதா, இல்லை அதனைப் பிடித்து வேறு பகுதிக்கு கொண்டு செல்வதா என தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×