செய்திகள்

ரூ.65 கோடி மோசடி புகார்: நகைக்கடை அதிபர்கள் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை

Published On 2017-05-27 03:16 GMT   |   Update On 2017-05-27 03:16 GMT
ரூ.65 கோடி மோசடி தொடர்பாக நகைக்கடை அதிபர்கள் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.
சென்னை:

ரூ.65 கோடி மோசடி தொடர்பாக நகைக்கடை அதிபர்கள் வீட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

இதுகுறித்து சி.பி.ஐ. அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

கோவையில் செயல்பட்டு வரும் லாவண்யா கோல்டு ஜூவல்ஸ் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனம் கோவையில் 3 இடங்களில் நகைக்கடைகளை நடத்தி வருகிறது.

இந்த நிறுவனம் ஸ்டேட் வங்கியில் சுமார் 65 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டதாக கோவை ரேஸ்கோர்ஸ் போலீசார் அந்த நிறுவனத்தைச் சேர்ந்த அசோக், பாலாஜி, நாகேந்திரன், மனோகரன் ஆகியோர் மீது 2013-ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்தனர்.

இந்த நிலையில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் இந்த வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சென்னை, கோவையில் உள்ள நகைக்கடை உரிமையாளர்களின் அலுவலகம், வீடு ஆகியவற்றில் சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

அப்போது ஹார்டு டிஸ்க், மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள் போன்றவற்றை கைப்பற்றினர். சென்னையில் சி.பி.ஐ. பெண் அதிகாரி சமந்தா தலைமையில் சி.பி.ஐ. அதிகாரிகள் சென்னை சவுகார்பேட்டை அகமதுநகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் மாடியில் செயல்பட்டு வந்த நகைக்கடை அதிபர் ஒருவரின் அலுவலகத்தில் சோதனை நடத்தினர்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.ஐ. அதிகாரிகளின் சோதனையை தொடர்ந்து வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்று தெரிகிறது.


Tags:    

Similar News