செய்திகள்

புதுச்சேரி சட்டபேரவையில் அமளி: என்.ஆர்.காங்கிரஸ் மற்றும் அ.தி.மு.க. வெளிநடப்பு

Published On 2017-05-25 05:34 GMT   |   Update On 2017-05-25 05:34 GMT
புதுவை சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் குறித்த முதல்வர் நாராயணசாமி நிகழ்த்திய உரையின் போது என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் அமளியில் ஈடுபட்டு, வெளிநடப்பு செய்தனர்.
புதுச்சேரி:

புதுவை சட்டசபையில் இன்று முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட் தாக்கல் செய்து உரை நிகழ்த்தினார்.

அப்போது என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. உறுப்பினர்கள் நாராயணசாமி பட்ஜெட் உரை நிகழ்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ஏற்கனவே கடந்த பட்ஜெட்டில் அறிவித்த திட்டங்கள் எதையும் நிறைவேற்றவில்லை. அரசு கொடுத்த வாக்குறுதிகள் அனைத்தும் செயல்படுத்தப்படாமல் உள்ளது.

எனவே, இப்போது அறிவிக்கப்படும் பட்ஜெட் திட்டங்களால் எந்த பயனும் இருக்காது என்று கூறி பட்ஜெட் உரையை வாசிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் பல்வேறு கோ‌ஷங்கள் அடங்கிய பேனர்களை கையில் ஏந்தி இருந்தனர். அரசுக்கு எதிராக கோ‌ஷம் எழுப்பியபடி இருந்தனர்.

ஆனாலும், நாராயணசாமி தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்தார். இதனால் கோபம் அடைந்த என்.ஆர். காங்கிரஸ், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகர் இருக்கையை நோக்கி சென்று அவரை முற்றுகையிட்டனர்.

அவைக்காவலர்கள் அவர்களை சுற்றி நின்று கொண்டு முதல்-அமைச்சர் மற்றும் சபாநாயகர் அருகே செல்ல விடாமல் தடுத்தனர். பின்னர் இருகட்சி எம்.எல்.ஏ.க்களும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். முதல்-அமைச்சர் நாராயணசாமி தொடர்ந்து பட்ஜெட் உரையை வாசித்தார்.
Tags:    

Similar News