செய்திகள்

ஊட்டியில் 121-வது சர்வதேச மலர் கண்காட்சி தொடங்கியது: எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்தார்

Published On 2017-05-19 05:21 GMT   |   Update On 2017-05-19 05:21 GMT
ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது சர்வதேச புகழ் பெற்ற மலர் கண்காட்சி இன்று தொடங்கியது. கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

ஊட்டி:

நீலகிரி மாவட்டம் ஊட்டியில் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் வகையில் கோடை விழா நடை பெறுவது வழக்கம். இந்த ஆண்டு கோடை விழா கடந்த 6-ந் தேதி கோத்தகிரி நேரு பூங்காவில் காய்கறி கண்காட்சியுடன் தொடங்கியது. அதன் பின்னர் கடந்த 13-ந் தேதி ஊட்டியில் ரோஜா மலர் கண்காட்சி நடந்தது.

இந்த நிலையில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் 121-வது சர்வதேச புகழ் பெற்ற மலர் கண்காட்சி இன்று (வெள்ளிக்கிழமை) காலை 9.30 மணிக்கு தொடங்கியது.

இந்த கண்காட்சியை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ரிப்பன் வெட்டி தொடங்கி வைத்தார்.

பூங்காவில் அமைக்கப்பட்டு இருந்த மாமல்லபுரம் கோவில் சிற்பம், மற்றும் மாடத்தில் வைக்கப்பட்டிருந்த மலர் தொட்டிகள், காட்சி அரங்குகள் ஆகியவற்றை முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பார்வையிட்டார்.

கண்காட்சியை பார்வையிட்ட பின்னர் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி நிருபர்களிடம் கூறியதாவது:-

ஊட்டி மலர் கண்காட்சியில் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் லட்சக்கணக்கான மலர்களை கொண்டு மாமல்லபுரம் கோவில் சிற்பம், அலங்கார தொட்டிகள், சிறப்பாக செய்யப்பட்டு உள்ளது.


இவ்வாறு அவர் கூறினார்.

இதில் அமைச்சர்கள் துரைக்கண்ணு, எஸ்.பி. வேலுமணி, செல்லூர் ராஜூ, வேளாண்மை துறை முதன்மை செயலாளர் ககன்தீப்சிங் பேடி, தோட்டக்கலை மற்றும் மலை பயிர்கள் துறை இயக்குனர் அர்ச்சனா பட்நாயக், எம்.பி.க்கள் அர்ச்சுனன்., ஏ.கே.செல்வராஜ், கோபால கிருஷ்ணன், மற்றும் நீலகிரி மாவட்ட கலெக்டர் சங்கர், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மலர் கண்காட்சியை முன்னிட்டு பூங்கா முழுவதிலும் நடவு செய்யப்பட்ட பல்வேறு ரகங்களில் பல லட்சம் வண்ண மலர்கள் பூத்து குலுங்குகின்றன. சுமார் 1 லட்சம் கொய் மலர்களை கொண்டு மாமல்லபுரம் பல்லவர் கால கடற்கரை சிற்ப அலங்காரம் அமைக்கப்பட்டுள்ளது. இது 30 அடி உயரம் கொண்டதாகும். இதுதவிர அழகிய மலர்களை கொண்டு மயில் உருவமும் அமைக்கப்பட்டுள்ளது.

அதேபோல 3 ஆயிரம் மலர்களை கொண்டு சுமார் 25 அடி உயரத்தில் இருவாச்சி பறவையின் உருவமும் உருவாக்கப்பட்டு இருந்தது

மேலும் பல வண்ண மலர்களை கொண்டு அலங்கார வளைவு உள்பட பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.

பூங்காவில் உள்ள காட்சி மாடத்தில் ஆஸ்டர், லில்லியம், கேலண்டூலா, பெட்டூனியா, பிளாக்ஸ், சால்வியா, பிகோனியா, ஆசியாடிக் லில்லி, கேண் டீப்ட் உள்ளிட்ட 800-க்கும் மேற்பட்ட மலர் ரகங்களை கொண்டு 15 ஆயிரம் மலர்தொட்டிகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன.

மேலும் பல்வேறு மலர் இதழ்களை கொண்டு வண்ணமயமான ரங்கோலி அமைக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பூங்காவில் தனியார் மற்றும் அரசு துறைகளின் சார்பில் காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டு இருந்தன.

இன்று தொடங்கிய மலர் கண்காட்சியை காண தமிழகம் மட்டுமல்லாமல் கேரளா, கர்நாடகா, மற்றும் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர்.

மலர் கண்காட்சி இன்று தொடங்கி வருகிற 21 -ந் தேதி வரை நடக்கிறது. கண்காட்சியின் நிறைவு நாள் மாலை பரிசளிப்பு விழா நடக்கிறது.

இதில் தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகள் வழங்குகிறார்.

Tags:    

Similar News